கொரோனாவின் 2வது அலை சுனாமிபோல ஆபத்தானது – உத்தவ் தாக்கரே

மும்பை:
மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
விநாயகர் சதுர்த்தி, தசரா போன்ற பண்டிகைகளை நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் கொண்டாடினோம். 
தீபாவளி பண்டிகையின் போது கூட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என நான் கூறினேன். நீங்களும் அதை பின்பற்றினீர்கள். இதன் காரணமாக கொரோனாவுக்கு எதிரான போர் நமது கட்டுக்குள் வந்துள்ளது.  ஆனால், உங்கள் மீது எனக்கு லேசான கோபம் உள்ளது. நான் ஏற்கனவே கூறியது போல தீபாவளிக்குப் பிறகு மக்கள் கூட்டம் அதிக அளவு உள்ளது. மக்களில் பலர் மாஸ்க் அணியாமல் செல்வதை என்னால் காண முடிகிறது. கொரோனா முடிந்து விட்டதாக யாரும் எண்ணக்கூடாது. 
அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். மேற்கத்திய நாடுகளாக இருக்கட்டும், டெல்லி அல்லது அகமதாபாத் ஆக இருக்கட்டும். கொரோனாவின் 2-வது மற்றும் மூன்றாவது அலை சுனாமி போல மிகவும் ஆபத்தானதாக உள்ளது.  அகமதாபாத் நகரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
மக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா இன்னும் வேகமாக பரவ போகிறது. தடுப்பூசி இன்னும் வெளிவரவில்லை. எப்போது தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என நமக்குத்  தெரியவில்லை. டிசம்பர் மாதத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு விடப்பட்டாலும் கூட மகாராஷ்டிராவிற்கு எப்போது கிடைக்கும் எனத் தெரியவில்லை.
மகாராஷ்டிராவில் 12 கோடி மக்கள் வசிக்கின்றனர். கொரோனா தடுப்பூசி இருமுறை செலுத்த வேண்டியுள்ளது. எனவே, 25 கோடி மக்களுக்கு நாம் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. ஆகவே, இதற்கு காலம் பிடிக்கும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். அதிக அளவு கூட்டமாக கூடுவதைத் தவிர்த்து விடுங்கள். மாஸ்க் அணியுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள். இது மட்டுமே நம்மை பாதுகாப்பாக வைக்கும். வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், இங்கு கூட்டமாக கூட  வேண்டாம். 
நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த நான் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.