கொரோனா பலியை தடுக்கும் வழி இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு| Dinamalar

வாஷிங்டன்:அமெரிக்காவில் வசிக்கும், இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் திருமலா தேவி, கொரோனா நோயாளிகளை மரணத்தில் இருந்து காப்பாற்றும் வழிமுறையை கண்டுபிடித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர், திருமலா தேவி கன்னேகன்டி.

இவர், அமெரிக்காவில், டென்னஸி மாகாணம், செயின்ட் ஜூட் குழந்தைகள் மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார். இவர் தலைமையிலான குழு, சுண்டெலியைப் பயன்படுத்தி, கொரோனா தாக்கம் குறித்து நடத்திய ஆய்வு விபரங்களை, மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ், முதலில் ஒருவரின் நுரையீரல் செல்களை தாக்குகிறது. இதைத் தொடர்ந்து, செல் அழிப்புப் பாதைகள் உருவாகின்றன.

இதன் மூலம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழக்கின்றன. இந்தச் செல் அழிப்பு பாதைகளை, ‘சைட்டோகினஸ்’ என்ற, ஒரு வித புரதப் பொருள் உருவாக்குகிறது. இந்த சிறிய புரதம், ரத்தத்தில் பல மடங்கு பெருகி, நோய்த் தொற்றின் வீரியத்தை அதிகரிக்க துணை புரிகிறது. அத்துடன், நுரையீரல் பாதிப்பிற்கும், இதர உறுப்புகள் செயலிழப்பிற்கும் காரணமாக உள்ளது. வைரஸ் தாக்குதலை எதிர்க்கவே, நம் உடலில், சைட்டோகினஸ் சுரக்கிறது என்ற போதிலும், அவற்றில் சில, வைரசை ஊக்குவிக்கவும் செய்கின்றன.

இது, கொரோனா, செப்சிஸ், மற்றும் அழற்சி நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.செல் அழிப்பு பாதைகளை உருவாக்கும், குறிப்பிட்ட, சைட்டோகினஸ் புரதத்தை கண்டுபிடித்து உள்ளோம். அதை அழிப்பதன் மூலம், கொரோனா, செப்சிஸ் போன்ற கொடிய நோயினால் உடல் உறுப்புகள் செயலிழப்பதையும், உயிரிழப்பையும் தடுக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.