சசிகலா திரைப்பட அறிவிப்பு | Dinamalar

ஐதராபாத்: சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற, தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா, ‘சசிகலா’ என்ற பெயரில் இயக்கும் புதிய திரைப்படத்தை, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் நாகார்ஜூனா, அமலா நடிப்பில், உதயம் என்ற திரைப்படத்தின் மூலம், தமிழில் பிரபலமானவர், இயக்குனர் ராம்கோபால் வர்மா. தெலுங்கில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வர், என்.டி.ராமாராவின் மனைவி லட்சுமி சிவபார்வதி குறித்து, இவர் இயக்கிய லட்சுமி என்ற திரைப்படம், சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாணின் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்து, இவர் இயக்கிய, பவர் ஸ்டார் என்ற திரைப்படமும், சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இயக்குனர் ராம்கோபால் வர்மா, தன், ‘டுவிட்டர்’ சமூக வலைதள பக்கத்தில், அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார்.அதில், சசிகலா என்ற பெயரில், ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கு முன் அந்தத் திரைப்படத்தை வெளியிடப் போவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பல சர்ச்சைக்குரிய விஷயங்களை, அந்த அறிவிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கங்கனா ரணாவத் நடித்து வெளியாக இருக்கும், தலைவி திரைப்படம் வெளியாகும் அதே தினத்தில், சசிகலா திரைப்படம் வெளியாகும் என, அவர் அறிவித்துள்ளார்.கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, 2021 ஜனவரியில் விடுதலை ஆகிறார் என்று கூறப்படும் நிலையில், ராம்கோபால் வர்மாவின் அறிவிப்பு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.