சமூக இணையதளங்களில் அவதூறு, மிரட்டல் விடுத்தால் 5 வருடம் சிறை

சமூக இணையதளங்களில் தனி நபருக்கு எதிராகவோ, பெண்களுக்கு எதிராகவோ அவதூறு கருத்துக்களை பரப்புவது மற்றும் மிரட்டல் விடுப்பவர்களுக்கு எதிராக கேரளாவில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி இந்த குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 வருடம் சிறைத் தண்டனை கிடைக்கும். இந்த புதிய அவசர சட்டத்திற்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் ஒப்புதல் அளித்துள்ளார். 2000 ஆண்டின் ஐடி சட்டம் 66-ஏ பிரிவு மற்றும் 2011 கேரளா போலீஸ் சட்டம் 118 டி பிரிவு ஆகியவை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதன் பின்னர் சமூக இணையதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புபவர்களுக்கு எதிராக எந்த சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வரவில்லை. இந்நிலையில் கேரளாவில் சமூக இணையதளங்களில் தனிப்பட்ட நபருக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் அவதூறு கருத்துக்களை பரப்புபவர்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கேரள அரசு அதை கண்டுகொள்ளாமல் அவசர சட்டத்தை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. கடந்த 10 மாதங்களுக்கு முன் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதில் கையெழுத்திடாமல் இருந்து வந்தார். ஏற்கனவே உச்சநீதிமன்றம் ரத்து செய்த சட்டப்பிரிவு என்பதால் இது தொடர்பாக அவர் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து வந்தார். இந்நிலையில் கேரள அரசின் இந்த அவசர சட்டத்திற்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி சமூக இணையதளங்களில் அவதூறு பரப்புவர்கள் மீது வாரண்ட் இல்லாமல் போலீசாரால் வழக்கு பதிவு செய்ய முடியும்.

யாரும் புகார் செய்ய வேண்டிய தேவையில்லை. புகார் இல்லாமலேயே போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யலாம். இதன்படி 5 வருடம் சிறைத் தண்டனை அல்லது 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இந்த அவசர சட்டத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்காகவும், அரசுக்கு எதிரான கருத்துக்களை பரப்புபவர்களை அடக்குவதற்கும் தான் இந்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.

https://tamil.thesubeditor.com/news/india/25605-police-law-amendment-to-prevent-cyber-attack-in-kerala.html

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.