தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : ஓட்டுப்பதிவு ஆரம்பம்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : ஓட்டுப்பதிவு ஆரம்பம்

22 நவ, 2020 – 11:09 IST

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் 2020 – 22ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று(நவ., 22) காலை 8 மணிக்குத் துவங்கியது. மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. நிரந்தர உறுப்பினர்கள் சுமார் 1300 பேர் ஓட்டளிக்கும் உரிமை பெற்றுள்ளனர். பாதுகாப்பு அம்சங்களுடன் இன்றைய தேர்தல் நடந்து வருகிறது.
இந்தத் தேர்தலில் நலன் காக்கும் அணி சார்பில் ராமசாமி என்கிற முரளி தலைமையில் போட்டியிடும் அணிக்கும், பாதுகாப்பு அணி சார்பில் டி.ராஜேந்தர் தலைமையில் போட்டியிடும் அணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
மேலும், தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடும் பி.எல்.தேனப்பன், துணைத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடும் சிங்காரவேலன், கதிரேசன், பொருளாளர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடும் ஜே.எஸ்.சதீஷ் குமார் ஆகியோரும் அணிகள் சார்பாகப் போட்டியிடுபவர்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளார்களாம். 21 செயற்குழு உறுப்பினர்களுக்கு 94 பேர் போட்டியிடுகிறார்கள்.
நாளை காலை பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் அதிகாரியாக முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் செயல்படுகிறார்.
இந்தத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.