திருப்பதி ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்பயாகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு 7 டன் மலர்களால் நேற்று புஷ்பயாகம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு வருடத்தில் வருகிற கார்த்திகை மாத சிராவண நட்சத்திரத்தில் புஷ்பயாகம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்திலிருந்து பல வண்ண மலர்கள் ஏழுமலையான் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கோயில் முன்பு  செயல் அலுவலர் ஜவகரிடம் வழங்கப்பட்டது. பின்னர் கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.  பின்னர் சர்வ பூபால வாகனத்தில் கொலு வைக்கப்பட்ட தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு 7 டன் எடையுள்ள 14 வகையான மலர்கள் மற்றும் துளசி, மருவம் வில்வம் போன்ற உள்ளிட்டவற்றால் புஷ்பயாகம் நடந்தது. புஷ்பயாகத்தையொட்டி, கோயிலில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், டோல் (ஊஞ்சல்) உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம் ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.