நாபான பேமசிறி மகா நாயக்க தேரரின் சமய ஞானம், தூய்மை, நல்லொழுக்கம் சமூகத்திற்கு ஆசீர்வாதமும் முன்மாதிரியுமாகும்  –  ஜனாதிபதி 

இலங்கை ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய நாபான பேமசிறி நாயக்க தேரரின் சமய ஞானம், தூய்மை, நல்லொழுக்கம் சமூகத்திற்கு ஆசீர்வாதமும் முன்மாதிரியுமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

தேரர் அவர்களின் மறைவு புத்த சாசனத்திற்கும் நாட்டிற்கும் உலகெங்கிலும் உள்ள பௌத்த சமூகத்திற்கும் மற்றும் தனிப்பட்ட முறையில் தனக்கும் பெரும் இழப்பாகும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் (22) கண்டி, குண்டசாலை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இடம்பெற்ற இலங்கை ராமன்யா மகா நிகாயவின் மகாநாயக்க தேரர், மெனிக்ஹின்ன வித்யாசாகர பிரிவெனாதிபதி அக்கமகா பண்டித சங்கைக்குரிய நாபான பேமசிறி நாயக்க தேரரின் தகனக் கிரியையின் போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

தகனக் கிரியை இடம்பெறும் இடத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள், சங்கைக்குரிய நாயக்க தேரரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
பின்னர் தேரரின் நினைவாக நினைவுப் புத்தகத்தில் விசேட குறிப்பொன்றை பதிவுசெய்தார்.

1922 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி கண்டி நாபான கிராமத்தில் பிறந்த நாயக்க தேரர் அவர்கள் இறக்கும் போது அவருக்கு 98 வயது. அவர் 1933 ஆம் ஆண்டு பௌத்த தேரருக்கான சமய நெறிகளை கற்க ஆரம்பித்ததுடன், 1943 இல் சமயப் பணியில் அமர்த்தப்பட்டார்.

உலகப் புகழ்பெற்ற தேரர்களுக்கு பர்மிய அரசு வழங்கும் “அக்கமஹா பண்டித“ விருதைப் பெற்ற தேரர் அவர்கள், 2012 ல் இலங்கை ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரராக தெரிவுசெய்யப்பட்டு இறக்கும் வரை இந்தப் பதவியை வகித்தார்.

பௌத்த மதத்தின் ஆழமான தத்துவத்தை சமூகமயமாக்குவதிலும், அதற்கேற்ப தனித்துவமான கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதிலும் மகா சங்கத்தினர் முக்கிய பங்கு வகித்ததாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். பௌத்த சமயத்தையும், கலாச்சாரத்தையும் சிங்கள இனத்தையும் பாதுகாத்த அதே வேளையில் நாட்டின் ஏனைய சமூகங்களுடனான சகவாழ்வுக்கு மகா சங்கத்தினர் வழங்கும் பங்களிப்பு மகத்தானது என்று ஜனாதிபதி கூறினார்.

நாபான பேமசிறி நாயக்க தேரரின் தகனக் கிரியைகள் முழுமையான அரச மரியாதையுடன் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மகாநாயக்க தேரர்கள், அனுநாயக்க தேரர்கள் தலைமையில் மகா சங்கத்தினர், ஏனைய சமயத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை ராமன்ய மகா நிகாயவின் நிர்வாக சபைத் தலைவர் கரு ஜயசூரிய மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.11.22

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.