புயல் எச்சரிக்கை அறிவிப்பால் வேதாரண்யம் பகுதியில் மரங்களை வெட்டும் மக்கள்: அத்தியாவசிய பொருட்கள் வாங்கி இருப்பு வைப்பு

வேதாரண்யம்: புயல் எச்சரிக்கை அறிவிப்பால், கஜா புயலால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியில் பொதுமக்கள் தாங்களாக மின்பாதையில் உள்ள மரங்களை வெட்டியும், மற்ற இடங்களில் மரக்கிளைகளையும் வெட்டி அகற்றுகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைத்துள்ளனர். நாகை மாவட்டம் கடற்கரை பகுதிகளில் புயல் காரணமாக நாளை (24ம்தேதி) முதல் 26ம்தேதி வரை கனமழையும், பலத்த காற்றும் வீசும் என்று வானிலை மையம் அறிவிப்பு செய்துள்ளது. கடந்த 2018ல் கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த வேதாரண்யம் பகுதி மக்கள் இந்தப்புயலின் அறிவிப்பை கண்டு அச்சம் அடைந்துள்ளனர். இதனால் கூரை வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு தார்ப்பாய் போடுகின்றனர். ஓட்டு வீட்டில் உள்ளவர்கள் ஓடுகளை பிரித்து பாதுகாப்பாக வைத்து வருகின்றனர்.வீடுகளின் ஓரமாக உள்ள தென்னை, மா, புயலில் பாதிக்காத அளவுக்கு மரங்களில் உள்ள கிளைகள் மற்றும் தென்னை மட்டைகளை வெட்டி உள்ளனர். தாங்கள் வளர்க்கும் கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு ஓட்டி சென்றுள்ளனர். கால்நடை தீவனமான வைக்கோல், கடலைத்தழை ஆகியவற்றை தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். கடும் காற்று வீசும் என்ற பயத்தில் மின்பாதைகளில் உள்ள மரங்களை தாமாகவே முன் வந்து வெட்டி வருகின்றனர். வேதாரண்யம் பகுதியில் உள்ள மீனவ கிராமங்களான ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் மீனவர்கள் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள், வலைகளை டிராக்டர் உதவியுடன் மேடான பகுதிகளுக்கு எடுத்து சென்று வைத்துள்ளனர். அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள், காய்கறி, மெழுகுவர்த்தி, டார்ச்லைட், பேட்டரி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் முன்கூட்டியே வாங்கி இருப்பு வைக்கின்றனர். வாகனங்களுக்கு டீசல், பெட்ரோல் நிரப்பி வருகின்றனர். பாதிப்பில் இருந்து தங்களை காக்க, முன்ஏற்பாடுகள் அனைத்தையும் பொதுமக்கள் தாங்களாகவே செய்து வருகின்றனர். கோடியக்கரையில் மீன்துறை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பட்டு அறையில் இருந்து கடலில் இருக்கும் மீனவர்களுக்கும், படகு உரிமையாளர்களுக்கும் புயல் எச்சரிக்கை செய்து அவர்கள் விரைவில் கரை திரும்ப வேண்டுமென்றும், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை அறிவிப்பு செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.