பென்சில்வேனியா வழக்கு தள்ளுபடி; அதிபர் டிரம்பிற்கு பெரும் பின்னடைவு| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், ஜோ பைடன் பெற்ற வெற்றிக்கு எதிராக, அதிபர் டிரம்ப் தாக்கல் செய்த மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அமெரிக்காவில், சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், வெற்றிபெற்றார். இவரும், துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசும், வரும் ஜன., 20ம் தேதி, முறைப்படி பொறுப்பேற்கவுள்ளனர்.எனினும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன் தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார். பிரதான மாகாணங்களில், பைடன் பெற்ற வெற்றிக்கு எதிராக, அவர் தரப்பில், பல வழக்குகள் தொடரப்பட்டன. எனினும், அதில் பெரும்பாலான வழக்குகளை, நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. இந்நிலையில், 20 ஓட்டுகளை கொண்ட பென்சில்வேனியா மாகாணத்தின் தேர்தலில், மோசடி நடந்துள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மாவட்ட நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக, அதிபர் டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கில், எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. வெறும் யூகங்கள் அடிப்படையில், அனைத்து சட்ட வாதங்களும் முன்வைக்கப்பட்டன. அமெரிக்காவில், ஒவ்வொரு வாக்காளரின் ஓட்டுரிமையும் பாதுகாக்கப்படவேண்டும். அடிப்படை ஆதாரமற்ற வாதங்களை வைத்து, நீதிமன்றத்தால் வாக்காளர்களின் ஓட்டுகளை நிராகரிக்க முடியாது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, அதிபர் டிரம்பிற்கு, பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.மீண்டும் ஓட்டு எண்ண மனுஅமெரிக்காவில், 16 ‘எலக்டோரல் காலேஜ்’ ஓட்டுகளை உடைய ஜார்ஜியா மாகாணத்தில், ஜோ பைடன், வெற்றிபெற்றார். மறு ஓட்டு எண்ணிக்கையிலும், 12 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், பைடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், இங்கு, மீண்டும் ஒரு முறை ஓட்டு எண்ணிக்கையை நடத்தக்கோரி, அதிபர் டொனால்டு டிரம்ப் சார்பில், நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.