வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட ஆயிரம் பேர் மீது வழக்கு., முத்தரசன் கண்டனம்.!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையை, ஜனநாயக செயல்பாடுகளை முடக்கப் பயன்படுத்துவது அறிவார்ந்த செயலாகாது. அரசின் ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் முதல்வரும், அமைச்சர்களும் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, செய்தியாளர்களை சந்திக்கும் போது அரசியல் பேசிவருவதை அனைவரும் அறிவர். அதிமுக நடத்தும் நிகழ்ச்சிகளில் எந்தவித வரம்பும் இல்லாமல் கட்சியினர் கூட்டும் கூட்டம் பற்றிய செய்திகளும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் நாள்தோறும் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் திமுக இளைஞர் அணி ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்ற, அதன் மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது ஐந்து காவல் நிலையங்களில் பேரிடர் மேலாண்மை சட்டம், இந்தியத் தண்டனை சட்டம், பொது சுகாதாரச் சட்டம் என பல்வேறு சட்டங்களில் உள்ள பல்வேறு பிரிவுகளில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்துடன் திமுகவை சேர்ந்த 350-க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், விவசாயிகள் இயக்கத் தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் மீது அதிமுக அரசு வழக்குகள் போட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பாரபட்சமான நடைமுறை ஜனநாயக செயல்பாட்டின் மீது நடத்தப்படும் கடுமையான தாக்குதலாகும். ஆளும் கட்சி என்ற முறையில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசியல் மற்றும் தொழிற் சங்க கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட இயக்கங்கள் தொடர்பாக போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் நிபந்தனையின்றி விலக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது”. என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.