100 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட அன்னபூரணி சிலையை இந்தியாவிடம் ஒப்படைத்தது கனடா

டொரண்டோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் காசி என்று அழைக்கப்படுகிற வாரணாசியில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்ட அன்னபூரணி தெய்வ சிலை, கனடா நாட்டில் உள்ள ரெஜினா பல்கலைக்கழகத்தின் மெக்கென்சி கலைக்கூடத்தில் இருந்தது.

இந்த சிலை 100 ஆண்டுகளுக்கு முன்னர் வாரணாசியில் இருந்து களவாடப்பட்ட சிலை என்பதை திவ்யா மெஹ்ரா என்ற கனடா நாட்டு கலைஞர் ரெஜினா பல்கலைக்கழகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இந்த சிலை, இந்து தெய்வமான அன்னபூரணியின் சிலை என்பதை இந்திய மற்றும் தெற்காசிய கலைகளின் கண்காணிப்பாளர் டாக்டர் சித்தார்த்த ஷா அடையாளம் காட்டினார்.
அதைத் தொடர்ந்து இந்த சிலையை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதற்காக கனடா நடவடிக்கை எடுத்தது.
இதில் கனடாவின் ஒட்டவா நகரில் உள்ள இந்திய துணை தூதரகமும், கனடா கலாசார துறையும் உதவ முன்வந்தன.
கடந்த 19-ந் தேதி காணொலி காட்சி வழியாக அங்கு நடந்த நிகழ்ச்சியில் அன்னபூரணி சிலையை ரெஜினா பல்கலைக்கழகத்தின் தற்காலிக தலைவரும், துணைவேந்தருமான டாக்டர் தாமஸ் சேஸ், கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியாவிடம் முறைப்படி ஒப்படைத்தார்.
இதுபற்றி அஜய் பிசாரியா கூறியதாவது:-
அன்னபூரணியின் இந்த தனித்துவமான சிலை, இந்தியாவுக்கு மீண்டும் செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த கலாசார சின்னத்தை இந்தியாவுக்கு திருப்பித்தருவதற்கான செயலில் ஈடுபட்ட ரெஜினா பல்கலைக்கழகத்துக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இதுபோன்ற கலாசார பொக்கிஷங்களை தானாக முன்வந்து திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கை இந்தியா, கனடா இரு தரப்பு உறவின் முதிர்ச்சியையும், ஆழத்தையும் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அன்னபூரணி சிலை விரைவில் இந்தியாவுக்கு திரும்ப வந்து சேரும். அதன்பின்னர் வாரணாசியில் அந்த சிலை ஏற்கனவே இருந்த கோவிலில் வைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.