2021 தேர்தலில் பலத்த அடி; சொல்லிவச்சு நேரடியாக களமிறங்கும் ஸ்டாலின்!

திமுக
தலைவர்
மு.க.ஸ்டாலின்
தனது கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கோட்டையில் கழகத்தின் ஆட்சி நடைபெற்று 10 ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால், மக்களின் மனக்கோட்டையில், என்றென்றும் ஆண்டு கொண்டிருப்பது தி.மு.கழகம்தான். தமிழக மக்களுக்கும், கழகத்திற்குமான உறவு என்பது மலைக்கோட்டைகளை விட வலிமையானது. அதனால்தான், கொரோனா பேரிடர் நேரத்திலும், கழகத்தினர் ஓய்வின்றிக் களப்பணியாற்றி, ‘ஒன்றிணைவோம் வா’ எனும் செயல்திட்டத்தின் அடிப்படையில், பசித்தோருக்கும் – பரிதவித்தோருக்கும் தேவையான உதவிகளைச் செய்தனர். கட்சி பேதமின்றி, பல தரப்பட்ட மக்களும் கழகத்திடம் உரிமையுடன் கோரிக்கை வைத்து, உதவிகளைப் பெற்று வந்ததை அறிந்தபோது, இது மக்களின் இயக்கம் – மக்களுக்கான இயக்கம் – மக்களால் உருவான மகத்தான இயக்கம் என்கிற பெருமிதம் ஏற்பட்டது.

நாம் எடுத்து வைக்கின்ற அடிதான், ஆட்சியாளர்கள் மீதான சம்மட்டி அடியாக விழுகிறது. அதன்பிறகே, அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் துயில் கலைந்து மெல்ல அசைகிறார்கள் என்பதற்கு, மருத்துவக்கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு தொடர்பாக, ஆளுநர் மாளிகை முன்பு, கழகம் நடத்திய மாபெரும் கண்டனப் பேரணியே சாட்சியாகும். ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்த கோப்பு, திடீரென விழித்ததற்குக் காரணம், தி.மு.க.வின் முரசொலித்த போர்க்குரல்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கியதால், அவர்களின் பெற்றோர் படும்பாட்டை உணர்ந்து, அத்தகைய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தி.மு.கழகமே ஏற்கும் என உங்களில் ஒருவனான நான் அறிவிப்பு வெளியிட்டு, அது ஊடகங்களில் வெளியாகி, மக்களின் மனதில் பதிவாகி, வரவேற்பைப் பெற்ற பிறகே, கட்டணத்தை அரசு ஏற்கும் என ஆட்சியாளர்களிடமிருந்து திடீர் அறிவிப்பு வருகிறது. அதனால்தான் சொல்கிறேன், கோட்டையில் அ.தி.மு.க. இன்னும் சில மாதங்கள் இருக்கலாம். மக்களின் மனதில் குடிகொண்டிருப்பதும், அவர்களின் குறை தீர்ப்பதும், தி.மு.கழகமே.

நவம்பர் 1 முதல் ‘தமிழகம் மீட்போம்’ எனும் தலைப்பில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் காணொலி வாயிலாகத் தொடர்ந்து நடைபெறத் தொடங்கின. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் முதல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. நேற்று (நவம்பர் 21) அன்று எஃகுக் கோட்டையான சேலத்தில் நடந்த காணொலி பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றேன்.

சீட்டுக்கு போட்ட தூண்டில்; கடைசியா ஏமாற்றத்துடன் வண்டி ஏறிய அமித் ஷா!

காணொலிப் பொதுக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகளைத் தங்கள் மனதில் பதியவைத்துக்கொண்டு, ‘தமிழகம் மீட்போம்’ என்கிற சூளுரையைப் பொதுமக்கள் மேற்கொள்ளும் அளவுக்கு இவற்றை வெற்றிகரமாக நடத்திய கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆரோக்கியமாக போட்டி போட்டது, தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்திற்குக் கூடுதல் வலிமை சேர்க்கும் வகையில் அமைந்தது. தொடர்ச்சியாக இதனை நடத்தவிருக்கும் மற்ற மாவட்டக் கழகத்தினருக்கும் என் வாழ்த்துகள் பெருகிவரும் வலிமையுடன் கழகம் தனது பயணத்தை மேற்கொண்டிருக்கும் சூழலில், கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள், மற்றொரு பிரம்மாண்டமான பரப்புரைப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார்.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்பில், தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சென்று சேர்ந்து எதிரொலித்திடும் வகையில், எதிர்வரும் 75 நாட்களில், 15 கழக முன்னணியினர் பங்கேற்று, 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய 15 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்துடன் 1500 கூட்டங்கள், 500-க்கும் அதிகமான உள்ளூர் நிகழ்வுகள், 10 லட்சம் நேரடிக் கலந்துரையாடல்கள் எனும் மகத்தான பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த திருக்குவளையிலிருந்து இளைஞரணிச் செயலாளர்
உதயநிதி
, நவம்பர் 20 அன்று தனது பரப்புரையைத் தொடங்கிய நிலையில், பெருமளவில் திரண்ட மக்களும், அனைத்து சமூகத்தினரும் அவருக்கு அளித்த வரவேற்பும் ஆள்வோரின் கண்களை உறுத்தியதால், உடனடியாக அவரைக் கைது செய்து அற்பத்தனமான அதிகார பலத்தைக் காட்ட முயற்சித்தது.

தி.மு.கழகம் இந்தக் கொரோனா பேரிடர் கால விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு, காணொலி வாயிலாக, மகத்தான அளவில் நிகழ்வுகளை நடத்தி, மக்களை ஒருங்கிணைத்தபோது, “தி.மு.க ஏன் வெளியே வரவில்லை?” என்று கேட்ட அதே முதலமைச்சரின் ஆட்சி நிர்வாகம்தான், தி.மு.கவினர் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டவுடனேயே, கைது நடவடிக்கையை மேற்கொள்கிறது. ஒரு உதயநிதிக்கே இந்த ஆட்சி பயந்துவிட்டதா? கழகக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் உதயநிதி போன்ற உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். அவர்கள் ஆயிரமாயிரமாய், லட்சோப லட்சமாய், இலட்சியக் கொடியேந்தி களத்தில் அடுத்தடுத்து அணிதிரளும்போது என்ன செய்யப் போகிறீர்கள்?

நாளொரு ஊழலும், பொழுதொரு கொள்ளையுமாக அதிலும் தங்கள் குடும்பத்தினரை-உறவினர்களை-பினாமிகளைக் கொண்டு அரசு கசனாவைச் சுரண்டிக் கொழுத்து, நான்காண்டுகள் ஆட்சி செய்த இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு டெல்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும் – வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது.

அவர்கள் எத்தனை செப்படி வித்தைகள் செய்தாலும் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். நாட்டை நாசப்படுத்தி – தமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழக மக்கள் எத்தகைய அடி கொடுத்தார்களோ, அதைவிட பலமான அடியை 2021-ல் சட்டப் பேரவைக்கான தேர்தலில் வழங்குவார்கள். அந்த நம்பிக்கையுடன் நாம் கவனமாகக் களப்பணியாற்றுவோம்; நாள்தோறும் நம் மக்களைச் சந்திப்போம். அவர்களின் மனங்களை வெல்வோம்.

நம் உயிர் நிகர் தலைவர் கட்டிக்காத்த இயக்கத்தை ஆட்சியில் அமரவைத்து, அதனைக் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வரை, நமக்கு ஓய்வில்லை. காணொலி வாயிலாக மக்களைச் சந்தித்து உரையாடிவரும் உங்களில் ஒருவனான நானும், தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் பொழுதில் நேரடியாகப் பரப்புரையை மேற்கொள்ளவிருக்கிறேன். மாநிலத்தில் ஆள்வோரும், அவர்களையும் அவர்களது ஊழல்களையும் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்களும், நமது வெற்றிப் பயணத்தைத் தடுக்க நினைக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.