இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 96.42 சதவீதமாக உயர்வு

புதுடெல்லி:
உலக அளவில் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில், தற்போது வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. கடந்த மாதம் புதிய தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது அதைவிட குறைந்துள்ளது.  அதேசமயம், குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,04,50,284 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 201 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்றைவிட புதிய தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு குறைந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,50,999 ஆக உயர்ந்துள்ளது. 
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,00,75,950 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 19,299 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1.44 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 96.42 சதவீதமாக உயர்ந்துள்ளது. 
செப்டம்பர் மத்தியில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் என்ற அளவில் இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கி தற்போது 2.3 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,23,335 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.