திடீரென்று அதிகரிக்கும் கொரோனா பரவல்..தடுப்பூசி வழங்கி உதவ மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்

திடீரென்று அதிகரிக்கும் கொரோனா பரவல்..தடுப்பூசி வழங்கி உதவ மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்

|

பிரேசிலியா: கொரோனா பரவல் திடீரென்று அதிகரித்துள்ளதால் உடனடியாக 20 லட்சம் கோவிஷீட்டு தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

பிரேசில் நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுக்குப் பின் பிரேசில் நாட்டில்தான் அதிக பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசில் நாட்டில் 54,247 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல நேற்று ஒரே நாளில் சுமார் 1,044 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் அதிபர் கடிதம்

இந்நிலையில், பிரேசில் நாட்டிற்கு உடனடியாக கோவிஷீல்டு தடுப்பூசியை அளித்து உதவ வேண்டும் என்று ஜெய்ர் போல்சனாரோ பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியாவில் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு எவ்வித பாதிப்புமின்றி, சீரம் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகளின் 20 லட்சம் டோஸை பிரேசிலுக்கு உடனடியாக வழங்கி உதவ வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரேசிலில் கொரோனா தடுப்பூசிகள்

பிரேசிலில் கொரோனா தடுப்பூசிகள்

பிரேசில் நாட்டில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரேசில் ஜெய்ர் போல்சனாரோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரேசில் நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாட்டிற்குத் தடுப்பூசி எப்படிக் கிடைக்கும்

ஒரு நாட்டிற்குத் தடுப்பூசி எப்படிக் கிடைக்கும்

ஒரு நாடு தனக்கு தேவையான தடுப்பூசிகளை இரண்டு வழிகளில் கொள்முதல் செய்து கொள்ளலாம். நேரடியாகத் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஆர்டர் அளிப்பதன் மூலம் கொள்முதல் செய்யலாம். இதன் மூலம் ஏற்கனவே பிரேசில் தனியார் மருத்துவமனை கூட்டமைப்பு பாரத் பயேடெக் நிறுவனத்திற்கு கோவாக்சின் தடுப்பூசி வேண்டி ஆர்டர் அளித்துள்ளது. அதேபோல ஒரு நாடு அதிகாரபூர்வமாக தடுப்பூசி தயாரிக்கும் நாட்டிற்கும் கோரிக்கை விடுக்கலாம். இதன்படியே தற்போது பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பிரதமர் மோடிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

திடீர் கடிதம் ஏன்

திடீர் கடிதம் ஏன்

கொரோனா பரவலுக்கு எதிராகப் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏற்கனவே கடுமையான விமர்சனங்கள் அவர் மீது முன்வைக்கப்படுகிறது. பிரேசில் ஏற்கனவே ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்காக ஆஸ்டர் ஜெனெகா நிறுவனத்திடம் ஆர்டர் அளித்திருந்தது. இருப்பினும், பிப்ரவரி மாதம் தொடக்கம் வரை 10 லட்சம் தடுப்பூசியை மட்டும் அளிக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்ததாலேயே இந்தியாவிடம் பிரேசில் தற்போது கோரிக்கைவிடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.