தியேட்டர்கள் அது பாட்டுக்கு திறந்திருக்கட்டும்; போனால் தானே, தொற்று ஏற்படும்…| Dinamalar

தமிழகத்தில், சினிமா தியேட்டர்களில், 100 சதவீத இருக்கைகளை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், கொரோனா நோய் தொற்று மிகுதியாக பரவவும், குறிப்பாக, இளைஞர்கள் பாதிக்கப்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த முடிவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.
– தமிழக காங்., தலைவர் அழகிரி

‘தியேட்டர்கள் அது பாட்டுக்கு திறந்திருக்கட்டும்; போனால் தானே, தொற்று ஏற்படும்…’ என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை.

அஞ்சல் துறை தேர்வுகளுக்கான மொழிகளின் பட்டியலில் தமிழ் இல்லை என்று பொங்கி எழுந்துள்ளனர், தமிழகத்தின் சில அரசியல்வாதிகள். தற்போதைய இந்த தேர்வு, புதிய பணி நியமனத்திற்கு அல்ல. ஏற்கனவே பணியிலிருக்கும் தபால் உதவியாளர்கள் மற்றும் தபால்களை வரிசைப்படுத்தும் பணியாளர்களுக்கான துறை தேர்வு. இப்படித் தான் காலம் காலமாக நடந்துள்ளது.
– பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

‘நல்லவேளை இப்படி சொன்னீர்கள். இல்லையேல், போராட தமிழக கட்சிகள் பலவும் திரண்டிருக்கும், உண்மை தெரியாமல்…’ என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வழக்கின் விசாரணை, அரசியல் தலையீடின்றி நேர்மையாக நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்

‘நேர்மையாக நடப்பதால் தான், புதிது புதிதாக குற்றவாளிகள் சிக்குகின்றனர்…’ என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.

கொச்சையாக பேசுவது, குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீதான வன்மம், பெண்களை போகப் பொருளாக பார்ப்பது, கேட்கவே கூசும் இரட்டை அர்த்த பேச்சுக்கள், ஈ.வெ.ரா., துவங்கி, இன்றைய, தி.மு.க., கிளை செயலர் வரை பேசுவது அவர்களின் வாடிக்கை. ‘நம்ம நாட்டு விவகாரத்தை கவனிக்கவே அவர் முன்னுரிமை கொடுப்பார்.
– பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

‘உங்களுக்கு தெரிந்துள்ளது, சொல்கிறீர்கள்…’ என, விட்டேந்தியாக கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.

ஈழத் தமிழர்களுக்கு தற்போது இருக்கும் குறைந்தபட்ச சுய மரியாதையையும் பறிக்கும் மாகாண ஒழிப்பு திட்டத்தை, உடனடியாகக் கைவிட வேண்டும். இந்தியா — இலங்கை ஒப்பந்தத்தால் உருவாக்கப்பட்ட, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து, மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்

உங்கள் கோரிக்கை, கண் துடைப்பு, வெத்து கோரிக்கை தான்…’ என, காட்டமாக சொல்லத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை.

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டவர்கள், அ.தி.மு.க.,வினர் என்பதால், சட்டத்தின் சந்து, பொந்துகளில் நுழைந்து, அவர்கள் தப்பி விடக் கூடாது. அப்போது தான், பெண்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் நம்பிக்கை ஏற்படும்.
– திராவிடர் கழகத் தலைவர் வீரமணி

எப்போவாவது உண்மையை பேசுவீர்கள் என எதிர்பார்த்தால், அந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும், அ.தி.மு.க.,வினர் என்கிறீர்களே…’ என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.

பா.ஜ., சார்பில், தமிழகத்தில் நடத்திய வேல் யாத்திரை வெற்றியின் முதல்கட்டமாக, தமிழக அரசு, தைப்பூச திருவிழாவுக்கு, அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்து கடவுள்களை விமர்சனம் செய்யும் திராவிட கட்சிகளுக்கு எதிராக, பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
– பா.ஜ., இளைஞரணி மாநில தலைவர் வினோஜ்

‘அரசு விடுமுறை விட்டு என்ன பயன்; பிரபலமான கோவில்களில் நடக்கும் தேரோட்டங்களுக்கு, பிற ஊர்க்காரர்களுக்கு அனுமதி கிடையாதாமே…’ என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் பேச்சு.

சசிகலா குறித்து ஆபாசமாக ஏதும் பேசவில்லை. முதல்வர் இ.பி.எஸ்., அவர் காலில் விழுந்து பதவி வாங்கினார் என்று தான் பேசினேன்.
– தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி

ஆபாசமாக பேசியதை விட, இது மிகவும் அவதுாறு அல்லவா…’ என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பேச்சு.

எம்.ஜி.ஆர்., ஆட்சிக்கு வருவதற்கு முன், அவர் உழைப்பால் பெற்ற ஊதியம் அனைத்தையும் மக்களுக்காக கொடுத்து, மக்கள் தலைவர் என பெயர் பெற்றவர். ஆனால், கமல்ஹாசன், இதுவரை மக்களுக்காக என்ன உதவி செய்துள்ளார்; பேரிடர் காலங்களில் சிறு உதவியாவது செய்துள்ளாரா?’
– அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி எம்.பி.,

‘உங்கள் கட்சிக்கு போட்டி, தி.மு.க., தானே; கமலை பிடித்து சாடுகிறீர்களே…’ என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி எம்.பி., பேட்டி.

நாங்கள் தேசிய கட்சி. எங்களின் முக்கிய முடிவை, தேசிய தலைமை தான் அறிவிக்கும். அந்த வகையில் தான், முதல்வர் வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும் என சொல்லி வருகிறோம். எந்த இடத்திலாவது, இ.பி.எஸ்., முதல்வர் வேட்பாளர் இல்லை என, சொல்லி இருக்கிறோமா?’
– அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

‘பூவை, பூன்னும் சொல்லலாம்; புஷ்பம்ன்னும் சொல்லலாம்; புய்ப்பம் என்றும் சொல்லலாம் என, சொல்வது போல உள்ளதே…’ என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.