போபாலில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர் உயிரிழப்பு

போபால், ஜன. 10-

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட போபாலைச் சேர்ந்த தன்னார்வலர், 10 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவரது உயிரிழப்புக்கும், தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என மருந்து நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரசுக்கு கோவாக்சின் மருந்தை கண்டுபிடித்தது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது. மூன்றாம்கட்ட பரிசோதனை முடியும் முன்னே ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கூறி மருத்துவ வல்லுநர்கள் கவலையை வெளிப்படுத்தினர். இதனிடையே தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற, மத்தியபிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த தீபக் மராவி என்ற 42 வயது தன்னார்வலர், கடந்த டிசம்பர் 21ம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 நாட்களில் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அவரது இறப்பு குறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில், மருந்து நிறுவனம் தரப்பில் கூறும்போது, “போபால் காந்தி மருத்துவக் கல்லூரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, அவரது உடலில் விஷம் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதால் இதயம் செயலிழந்ததே மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. அவரது இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை நடத்தப்பட்ட மக்கள் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் துணைவேந்தர் டாக்டர் ராஜேஷ் கபூர் கூறுகையில், “டிசம்பர் 12ம் தேதி அவருக்கு மருந்து செலுத்தப்பட்டது. அரசின் வழிகாட்டுதல்படி அவர் 30 நிமிடங்கள் கண்காணிக்கப்பட்டு அதன் பின்னர்தான் அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து அவரை எட்டு நாட்கள் வரை கண்காணித்தோம். எனவே அவர் எதனால் இறந்தார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.