
ஆம்பூரில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த வழியே வந்த நகராட்சி பொறியாளரின் ஜீப்பை சிறைபிடித்தனா்.
ஆம்பூா் நகராட்சியில் பல்வேறு வார்டுகளில் தூய்மைப் பணிகள் ஒப்பந்த அப்படையில் தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
பொங்கல் போனஸ், இஎஸ்ஐ, குழுக் காப்பீடு, பணி காலத்தில் இறந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம், ஊதியம் வழங்கும்போது உரிய ரசீது, ஊதியப் பட்டியல், நகராட்சி அடையாள அட்டை என்பன உள்ளிட்டவை வழங்க வேண்டும் என கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வந்தனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்
இந்நிலையில், ஆம்பூா் நகராட்சி அலுவலக வாயிலின் முன்பு பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நகராட்சி அலுவலகத்துக்கு வந்த பொறியாளா் திலீபனின் ஜீப்பை முற்றுகையிட்டு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுட்டனர்.
அவர்களுடன் பொறியாளா் திலீபன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்த நிறுவனத்தாரிடம் பேசி உரிய தீா்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து தூய்மைப் பணியாளா்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.