கரோனா தொற்று காரணமாக கிராமி விருதுகள் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது ‘கிராமி’ விருது. 1959ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் சமீபத்தில் வெளியானது.
ஜனவரி மாதம் 31ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் கிராமி விருது நடைபெறவிருந்த நிலையில், புதிய வகை கரோனா காரணமாக மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராமி விருதின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது, “லாஸ் ஏஞ்சல்ஸில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைவிடச் சிறந்தது எதுவும் இல்லை. எனவே, ஜனவரி மாதம் நடக்கவிருந்த கிராமி விருதுகள் மார்ச் மாதம்வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன ” என்று தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, சவூதி , பிரிட்டன், இந்தோனேசியா ஆகிய நாடுகளும் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 8.5 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.