குடியரசு தின கொண்டாட்டங்களில் இடையூறு எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது, விவசாயிகள் டிராக்டர் பேரணி திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வேளாண் துறைக்கான மத்திய இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 50 நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரை 8 சுற்றுப்பேச்சு மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடந்தும் எந்த முடிவும் கிட்டவில்லை. இந்தப் போராட்டத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்தியாகம் செய்துவிட்டார்கள்.
மத்திய அரசு தங்களின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் ஜனவரி 26-ம் தேதி குடியரசு நாள் அன்று, தேசியக் கொடியுடன் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி டெல்லிக்குள் நுழையப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்றைய தனது ட்விட்டர் பதிவில் பலம்வாய்ந்த சக்திகளுக்கு எதிராக தங்கள் உரிமைகளுக்காக போராடும் எங்கள் விவசாயிகள்- தொழிலாளர்களுக்காக சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதனை கோடிட்டு காட்டி வேளாண் துறைக்கான மத்திய இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ஏஎன்ஐயிடம் கூறியதாவது:
குடியரசு தினத்தன்று விவசாயிகள் திட்டமிட்டுள்ள உத்தேச டிராக்டர் பேரணி திட்டதை அவர்கள் கைவிட வேண்டும். ஏனெனில் குடியரசு தின கொண்டாட்டங்களில் ஏதேனும் இடையூறு அல்லது தடைகள் ஏற்பட்டால் அது உலகிற்கு தவறான செய்தியை தெரிவிக்கும். விவசாயிகள் தங்கள் முடிவை திரும்பப் பெற வேண்டும்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அமைத்த குழு சார்பற்ற முடிவுகளை நிச்சயம் எடுக்கும், விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை அவர்களிடம் முன் வைக்க முடியும், இதன்மூலம் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீர்ப்பை விரைவில் அறிவிக்க முடியும். மேலும் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் விவசாயிகளைப் பற்றியும் போராடும் விவசாயிகள் சிந்திக்க வேண்டும்.
விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசை விமர்சித்து ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளதை ப் படித்தேன். உண்மையில் ராகுல் காந்தி இந்த விஷயத்தை அரசியல் மயமாக்குகிறார், காங்கிரஸ் இப்பிரச்சினையை தூண்டிவிடுகிறது என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.