`நானும் ஒரு விவசாயிதான்!' – உச்ச நீதிமன்றம் அமைத்த நால்வர் குழுவிலிருந்து விலகிய பூபிந்தர் சிங்

நாடு முழுவதும் விவாதப் பொருளாக இருக்கிறது மத்திய அரசு, பாராளுமன்றத்தில் முறையாக விவாதிக்காமல் கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்கள். விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இந்தச் சட்டங்கள் இருப்பதாகச் சொல்லி, போராடி வருகிறார்கள் விவசாயிகள். கடும் குளிரில், 60 விவசாயிகள் உயிரிழந்த நிலையிலும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்னைகளை ஆராய்வதற்காக நான்கு நபர்கள் அடங்கிய குழுவையும் அமைத்தது.

Farmers protest against new farm laws

Also Read: நண்டை சுட்டு நரிகளை காவலுக்கு வைத்துள்ள உச்ச நீதிமன்றம்… நால்வர் குழு மீது நம்பிக்கையற்ற விவசாயிகள்!

ஆனால், “நீதிமன்ற உத்தரவு மத்திய அரசுக்கு மறைமுகமாக உதவுகிறது. அந்தக் குழுவில் உள்ள நான்கு நபர்களும் அரசுக்கு ஆதரவானவர்கள். அதனால் அந்தக் குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது. இடைக்காலத் தடையைக் காரணம் காட்டி போராட்டத்தை நீர்த்துப்போக வைக்க மத்திய அரசு முயல்கிறது. வேளாண் சட்டங்களை நீக்கும் வரை போராட்டம் தொடரும்” என அறிவித்துப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள் போராட்டக் குழுவினர். அதில் விவசாயிகளுக்கான பிரதிநிதியாக முன்னாள் எம்.பியும், பாரதிய கிசான் யூனியன் தலைவர் மற்றும் அகில இந்திய கிசான் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான பூபிந்தர் சிங் மான் நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் பஞ்சாப் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், “மத்திய அரசு கொண்டுவந்த மூன்று சட்டங்கள் குறித்து விவசாய சங்கங்களுடன் கலந்துரையாட அமைக்கப்பட்ட நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழுவில் என்னைப் பரிந்துரைத்த நீதிமன்றத்திற்கு நன்றி. நானும் ஒரு விவசாயிதான். அத்துடன் ஒரு சங்கத்தின் தலைவராகவும் பொதுமக்களிடம் நிலவும் உணர்வுகள் மற்றும் அச்சங்கள் பற்றி யோசிக்கிறேன். பஞ்சாப் மற்றும் அனைத்து விவசாயிகளின் நலன்களில் சமரசம் செய்யும் எந்த ஒரு பதவியையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன். எனவே அந்த நால்வர் குழுவிலிருந்து விலகிக்கொள்கிறேன்” என இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பூபிந்தர் சிங் மான்.

பூபிந்தர் சிங் மான்

டெல்லி போராட்டக்குழுவினர் இதனை வரவேற்றுள்ளார்கள். “இவரைப் போலவே விவசாயிகள் போராட்டத்தில் உள்ள நியாயங்களை மற்றவர்கள் உணர்ந்து, அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்” எனச் சொல்கிறது போராட்டக் குழு. இடைக்காலத் தடை எங்களுக்குத் தேவையில்லை. நிரந்தரமாக வேளாண் சட்டங்களை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார்கள் போராடும் விவசாயிகள்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைக் காட்டி, விவசாயிகளை கலைந்துபோகச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனையில் உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.