ரிஷப் பந்த் 100 டெஸ்டுகள் விளையாடுவார்!

 

இந்திய விக்கெட் கீப்பர் 100 டெஸ்டுகளுக்கு விளையாடும் திறமை கொண்டவர் என முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோர் கூறியுள்ளார். 

சமீபகாலமாக பேட்டிங்கில் அசத்தி வரும் ரிஷப் பந்த், விக்கெட் கீப்பராகவும் அணியில் நிரந்தர இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் 3 டெஸ்டுகளிலும் தற்போதைய 2  டெஸ்டுகளிலும் அவரே விக்கெட் கீப்பராகச் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் ரிஷப் பந்தின் வளர்ச்சி குறித்து முன்னாள் விக்கெட் கீப்பரும் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவருமான கிரண் மோர் கூறியுள்ளதாவது:

பரோடாவில் யு-19 ஒருநாள் போட்டியின்போது தில்லி அணிக்காக விளையாடிய ரிஷப் பந்த், 8 சிக்ஸர்கள், 22 பவுண்டரிகளுடன் 133 பந்துகளில் 186 ரன்கள் எடுத்தார். உடனே அவருடைய பெயரை என்னுடைய மொபைலில் குறித்துக்கொண்டேன். அவர் நீண்ட காலம் விளையாடுவார் என நினைத்தேன். இப்போது சொல்கிறேன், 100 டெஸ்டுகள் விளையாடும் தகுதி கொண்டவராக மாறியுள்ளார். 

அவருடைய விக்கெட் கீப்பிங் திறமை குறித்து பலருக்கும் சந்தேகங்கள் உண்டு. எனக்கு அது இல்லை. இந்திய அணிக்காக விளையாட அனுமதிக்காமல் அவர் எப்படிக் கற்றுக்கொள்வார்? இந்தியாவை விடவும் வெளிநாட்டில் விக்கெட் கீப்பராகச் செயல்படுவது தான் கடினம். சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில் அவர் எப்படி விக்கெட் கீப்பிங் செய்தார் என அனைவரும் பார்த்தோம். சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்யும்போது சில தவறுகளும் அவர் செய்வார். 23 வயது தான் ஆகிறது. நன்கு முன்னேறி சிறந்த விக்கெட் கீப்பராக மாறுவார். விமர்சனங்களால் அவர் கவலைப்படுவதில்லை என்றார்.

இதுவரை 18 டெஸ்டுகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த், இரு சதங்கள் உள்பட 1256 ரன்கள் எடுத்துள்ளார். 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.