கொரோனா,  பிரச்சினை காரணமாக அனைத்து திரையரங்குகளும் சுமார் 6 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டதால், தயாரிப்பாளர்கள் கடன் உடன் வாங்கி எடுத்த சிறிய பட்ஜெட் படங்கள் முதல், பெரிய பட்ஜெட் படங்கள் வரை திரைக்கு வர முடியாமல் போனது. விறுவிறுப்பாக நடந்து வந்த பெரிய நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களின் ஷூட்டிங் பணிகள் தள்ளிபோடப்பட்டது.

திரையரங்கில் படங்கள் வெளியாகாமல் இருந்ததால், தயாரிப்பாளர்கள் சிலர் ஓடிடி தளத்தில் தங்களுடைய படங்களை வெளியிட முன்வந்தனர். அதன் படி, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெண் குயின்’, ஜோதிகாவின் ‘பொன்மைகள் வந்தாள்’ சூர்யாவின் ‘சூரரை போற்று ‘ ஆகிய படங்கள் ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

பின்னர் திரையரங்கு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, உரிய கொரோனா பாதுகாப்புகளுடன், 50 சதவீத பார்வையாளர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் முதலில் அனுமதி கொடுத்தது. பின்னர் கொரோனா பிரச்சனை குறையவே, சமீபத்தில், 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.  ஆரம்பத்தில் கொரோனா அச்சம் காரணமாக, ரசிகர்கள் திரையரங்கம் வர தயக்கம் காட்டினாலும் ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீசுக்கு பின் சகஜ நிலை திரும்பியுள்ளது திரையரங்குகள்.

மேலும், திரைப்படங்களை ஓடிடியில் முதலில் திரையிட கூடாது என திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அப்படியே வெளியிடுவதாக இருந்தால், பெரிய படங்களை 50 நாட்களுக்கு பிறகும், சிறிய படங்களை 30 நாட்களுக்குப் பிறகும் ஓடிடியில் வெளியிடலாம் என திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர்கள்,  நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய நாளை முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளைபேச்சுவார்த்தை தோல்வி அடையும் பட்சத்தில் புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிடுவது இல்லை என நடப்பு தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்துள்ளனர். எனவே அடுத்த வாரத்தில் இருந்து புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.