உலகம் முழுவதும் கோரதண்டவம் ஆடிய கொரோனா வைரஸின் தாக்கம், புத்தாண்டின் ஆரம்பத்தில் இருந்தே கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது. தற்போது இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிரா, கேரளாவில் மட்டுமே கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கர்நாடகா மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் காணப்படுவதால், அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

பெங்களூருவில் உள்ள ஒரு குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் கல்லூரியில் புதிதாக கொரோனா கிளஸ்டர் உருவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் லாக்டவுன் நடைமுறைகளை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகமுள்ள கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்குள் நுழையும் அனைவரும் 72 மணி நேரத்திற்குட்பட்ட ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை சர்டிபிகேட்டை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்றும், அதில் நெகட்டீவ் என இருந்தால் மட்டுமே கர்நாடகாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என யார் கேரளா சென்று திரும்பினாலும், ஒவ்வொருமுறையும் இந்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களது மாதிரிகள் பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும் என்றும், கல்லூரி, ஓட்டல்களில் தங்கியிருப்பவர்களைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், உறவினர்கள் யாராவது சந்திக்க விரும்பினால் அதிகாரிகளிடம் உரிய அனுமதி தேவை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.