ஜம்மு – காஷ்மீருக்கு வந்துள்ள வெளிநாட்டுத் தூதர்கள் 24 பேர் அடங்கிய குழு இன்று ஜம்முவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதன் விளைவாக போராட்டம் மற்றும் வன்முறை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முக்கியத் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இது ஜனநாயக விரோதச் செயல் என்று நாடுமுழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பின. சர்வதேச அரங்கிலும் கண்டனக் குரல் ஒலித்தன. இந்நிலையில், வெளிநாட்டுத் தூதர்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழலையும் இயல்பு நிலையையும் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகளை வெளிநாட்டினருக்கு எடுத்துக் காட்டும் வகையில் வெளிநாட்டுத் தூதர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் பயணம் ஜம்மு காஷ்மீருக்குப் மேற்கொண்டனர்.
ராணுவத்தினர், அரசியல் தலைவர்களை சந்தித்து நிலைமைய ஆராய்ந்தனர். கடந்த மார்ச்சில் கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தூதர்கள் பயணம் தடைபட்டது.
தற்போது கெடுபிடிகள் தளர்ந்துள்ளதால், ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட 20 வெளிநாட்டு தூதர்கள் நேற்றும், இன்றும் 2 நாட்கள் ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டுத் தூதர்களுக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். காவல்துறை, ராணுவ உயர் அதிகாரிகளை சந்திப்பதோடு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியையும் சந்திக்கின்றனர்.