மனை வரன்முறையில் சிக்கல்! அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பு: மக்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு

திருப்பூர்:தமிழக அரசு கூடுதல் அவகாசம் வழங்கியும், அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால், வீட்டுமனை அங்கீகார அனுமதி பெறுவதில் சிக்கல் நீடிப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழக அரசு, 2016 அக்., மாதத்திற்கு முன் விற்கப்பட்ட தனிமனைகள் மற்றும் வீட்டுமனை பிரிவுகளுக்கு, அங்கீகாரம் வழங்கி வருகிறது. நகர் ஊரமைப்புத்துறையின் அங்கீகாரம் பெற்று, அதற்கான வளர்ச்சி கட்டணம் மற்றும் அங்கீகார கட்டணத்தை, வங்கி கணக்கில் செலுத்தியவருக்கு, உரிமம் வழங்கப்படுகிறது.கடந்த, 2016க்கு முன் விற்ற மனைகள் மற்றும் விற்கப்படாத அங்கீகாரமற்ற மனைகளுக்கு, 28ம் தேதி வரை வரன்முறை செய்ய வாய்ப்பு வழங்கியுள்ளது.
கிரய பத்திரம், வரைபடம் மற்றும் ஆன்லைன் வில்லங்கச்சான்று பெற்று, ‘ஆன்லைன்’ மூலமாக, 500 ரூபாய் கூர்ந்தாய்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.கடந்த ஓராண்டாக, நகர் ஊரமைப்புத்துறைக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, 28ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசு அவகாசம் வழங்கியும், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், கிராமப்புற மக்கள் மனை வரன்முறை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.மனை உரிமையாளர், ‘ஆன்லைன்’ மூலம், கம்ப்யூட்டர் சென்டர்களிலேயே, நகர் ஊரமைப்புத்துறையில் விண்ணப்பிக்கலாம். பிறகு, உரிய ஆவணங்களுடன் சென்று வங்கியில் பணம் செலுத்த வேண்டும். இங்கேதான், சிக்கல் நீடிக்கிறது.
ஊராட்சி மக்கள் கட்டணம் செலுத்த, ஒன்றிய அலுவலகம் சென்று, ‘சலான்’ பெற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.அங்கீகாரமற்ற மனைகள், வரன்முறை செய்த மனை விவரம் அனைத்தும், உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சிகளில் தலைவர் இல்லாததால், அவை ஒன்றிய அலுவலகத்தில் தனி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. தலைவர்கள் இருப்பதால், முழு விவரத்தையும் ஊராட்சிகளில் ஒப்படைத்து, அங்கு அங்கீகார சான்று பெற, மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.மாறாக, ஊராட்சி பகுதி மனை உரிமையாளர், வங்கியில் பணம் செலுத்துவதற்கான சலானை, ஒன்றிய அலுவலகத்தில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகின்றனர்.
பல்வேறு பணிப்பளு காரணமாக, ஒன்றிய அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள், உடனடியாக சலான் பெற முடியாத நிலை உள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:அரசு நிர்ணயித்துள்ள, கட்டணம் மற்றும் அபராதத்துடன், வங்கி கணக்கில் பணம் செலுத்துகிறோம். ஆனால், அதற்கான சலான் பெற அலைக்கப்படுகிறோம். மனை அங்கீகார வரன்முறை, ஊராட்சி தலைவர் வழங்குகிறார்.எனவே, ஒன்றிய அலுவலகத்தில் சலான் வழங்காமல், ஊராட்சி அலுவலகத்திலேயே வழங்க ஆவன செய்ய வேண்டும். மனை வரன்முறை செய்துகொள்ள மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.