விழுப்புரத்தில் பிப்.28-இல் அதிமுக கூட்டணி பொதுக்கூட்டம்: அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு?

 

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக அணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், பாமக, தேமுதிக, தமாகா தரப்பிலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்வது ஓரளவுக்கு உறுதியான நிலையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ளது.

பாஜக தவிர்த்து பிற கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இறுதி வடிவம் பெறும் நிலையில், தொகுதிப் பங்கீடுகள் குறித்து பேசப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் அதிமுக சார்பில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி.சாலை பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள திறந்தவெளி பகுதியில், இந்தப் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக கடந்த 15-ஆம் தேதி அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள பகுதியில் பூமி பூஜை போடப்பட்டு, வரும் 28-ஆம் தேதி அதிமுக மாநில மாநாடு போன்று நடத்தவும் திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன.

இதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் பங்கேற்க உள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டமாக அமைய உள்ளதால், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

பாமக, தேமுதிக, தமாகா தரப்பிலும் முக்கியத் தலைவர்கள் பங்கேற்பர் என்றும், இந்தக் கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை உறுதிப்படுத்திடும் விதமாக, விழுப்புரத்துக்கு வருகிற 28-ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித் ஷா வருகிறார் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக பாஜகவினர் கடிதம் அளித்துள்ளனர். எனவே, விக்கிரவாண்டி அருகே நடைபெறவுள்ள கூட்டம் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டமாகவோ, பாஜகவின் தேர்தல் பிரசார கூட்டமாகவோ இருக்கலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிமுக தரப்பில் கேட்டபோது, தேர்தலையொட்டி கட்சியின் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டமாகவும் இருக்கலாம், கூட்டத்தின் தேதியை இறுதி செய்து கட்சித் தலைமை தான் அறிவிக்கும் என்றனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.