வேலை வேண்டுமா… அப்போ கொரோனா தடுப்பூசி போட்டுக்கோ… வாடிகன் அரசு அதிரடி உத்தரவு

வேலை வேண்டுமா… அப்போ கொரோனா தடுப்பூசி போட்டுக்கோ… வாடிகன் அரசு அதிரடி உத்தரவு

|

வாடிகன்: முறையான சுகாதார காரணங்கள் இல்லாமல் கொரோனா தடுப்பூசியைப் பெற மறுப்பவர்கள் வேலை இழக்க நேரிடும் என்று வாடிகன் அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வகைகளும் வைரஸ் பரவலை அதிகமாக்கியுள்ளன.

அதிலும் ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஐரோப்பிய நாடுகள் முடிந்தவரை வேகமாகச் செயல்படுத்தி வருகின்றன. இதற்காக பைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளுக்கு பல்வேறு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

பரவும் போலி செய்திகள்

இருப்பினும், கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற பிரச்சாரமும் உலக நாடுகளில் அதிகரித்துள்ளன. கொரோனா வைரஸ் என்பது ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது என்றும் இவற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசிகள் தேவையில்லை என்றும் எவ்வித ஆதாரமும் இன்றி சிலர் பொய்யான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். இன்னும் சிலர், அதற்கு மேல் சென்று கொரோனா வைரஸ் என்றே ஒன்று இல்லை, எல்லாம் நாடகம் என்ற ரீதியிலும் போலி செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

வாடிகன்

வாடிகன்

இவற்றுக்கு மத்தியிலேயே ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, உலகிலேயே குட்டி நாடான வாடிகனில் கடந்த மாதம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. போப் ஆண்டவர் உள்ளிட்ட பல முக்கிய நபர்களுக்கும் அங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.

வேலையிழக்க நேரிடும்

வேலையிழக்க நேரிடும்

அதன்படி கொரோனா தடுப்பூசியைப் பெற மறுப்பவர்கள் வேலை இழக்க நேரிடும் என்று வாடிகன் அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான சுகாதார காரணங்கள் உள்ளவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் நிச்சயம் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் வேலையிலிருந்து நீக்கப்படுவீர்கள் என்றும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

போப் ஆண்டவர் ஆதரவு

போப் ஆண்டவர் ஆதரவு

கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைநகராகக் கருதப்படும் வாடிகன் நாட்டில் கொரோனா பரவல் குறைவாகவே உள்ளது. இருப்பினும், அனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை போப் ஆண்டவர் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம், இருப்பினும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளாமல் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நாம் ஆபத்தை ஏற்படுத்தக் கூடாது என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.