அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – அமெரிக்கா சொல்கிறது

வாஷிங்டன்,
அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் அரசு ஒப்புக் கொண்டது. அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தாா். மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினாா். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதற்கிடையே, தற்போது அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் போய் ஜோ பைடன் நிர்வாகம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இணங்கி நடந்தால் அமெரிக்கா மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் இணையும் என்று ஜோ பைடனின் நிர்வாகம் அண்மையில் அறிவித்தது.
மேலும் 2015- அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா விரைந்து செயலாற்ற வேண்டும் என ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. 
இது தொடர்பாக அமெரிக்க அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அணுசக்தி ஓப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் கூட்டு செயல்திட்டங்களை ஈரான் அரசு பின்பற்றுவதாக உறுதியளித்தால், ஜோ பைடன் தலைமையிலான அரசு இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.