'அந்தஸ்து' மட்டும் போதுமா மாநகராட்சியால் மக்களுக்கு கிடைத்ததென்ன

திண்டுக்கல்- ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1866 நவ.1 ம் தேதி முதல் திண்டுக்கல் நகராட்சியாக செயல்பட துவங்கியது. 1988 ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்ந்தது. 2014 பிப்.19 முதல் திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து, எட்டாம் ஆண்டில் இன்று (பிப்.19) அடியெடுத்து வைக்கிறது.

அந்தஸ்து மட்டும் கிடைத்தால் போதுமா. ஒரு மாநகராட்சிக்குரிய எந்தெந்த வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன என்று பார்த்தால், உதட்டை பிதுக்க வேண்டியுள்ளது என மக்கள் மனங்குமுறுகின்றனர்.தமிழகத்தின் 11 வது மாநகராட்சியான திண்டுக்கல்லின் மொத்த பரப்பு 14 ச.கி.மீ. மொத்தமுள்ள 48 வார்டுகளில் தற்போதைய மக்கள் தொகை 3 லட்சத்தை தாண்டிவிட்டது. சுற்றுலா, கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் வர்த்தக ரீதியாக தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் திண்டுக்கல் வருகின்றனர்.மாநகராட்சிக்கு பல்வேறு இனங்கள் வாயிலாக ஆண்டுக்கு ரூ.20 கோடி வருமானம் கிடைக்கிறது. இருந்தும் எந்த அடிப்படை வசதியாவது மக்களுக்கு முழுமையாக கிடைத்ததா என்றால் இல்லை என்ற குரலே ஓங்கி ஒலிக்கிறது.சுகாதாரம் சுமாருதான் குமாருசுகாதாரத்தை மேம்படுத்த முதற்கட்டமாக 22 வார்டுகளில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இருக்கு… ஆனால்… இல்லை ரகம்தான். சரியான வடிகால் இல்லாததால் ஆங்காங்கே கழிவு நீர் ரோட்டில் பாய்கின்றன. ஆனால் 6 மாதத்திற்கு ஒரு முறை வரி கட்டச் சொல்லி அடம் பிடிக்கின்றனர். காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆரம்பித்ததோடு சரி..அதனால் மாநகராட்சிக்கோ… மக்களுக்குமோ எந்த நன்மையும் இதுவரை கிடைக்கவில்லை. நகர் பகுதியில் சுகாதாரம் கொஞ்சம் சுமார் தான். டெங்கு, மலேரியா, மர்ம காய்ச்சலும் அவ்வப்போது தலைகாட்டி விட்டு செல்கின்றன. பெருகிவிட்ட தெருநாய்கள் பொதுமக்களையே கடிப்பதால், மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை.

விரிவாக்கத்தில் விரிசல்பத்து ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைத்து, எல்லை விரிவாக்கம் செய்யும் கோப்புகள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பீரோவில் உறங்குகிறது. பல்வேறு வரி இனங்கள் மூலமாக கோடிக் கணக்கில் வருவாய் கிடைத்தாலும் செலவு என்னவோ ‘டபுள்’ தான். மாநகராட்சியான பின்பும் வருவாயை பெருக்கும் எந்த திட்டமும் கைவசம் இல்லை. எல்லை விரிவாக்கம் இல்லாததால் நாளுக்கு நாள் நகருக்குள் நெரிசல் தொல்லை அதிகரிக்கிறது.புழுதி பறக்கும் மாநகராட்சி ரோட்டில் அரை மணி நேரம் ரவுண்ட் அடித்தால் ‘ஆஸ்துமா’ வருவதை யாராலும் தடுக்க முடியாது. பல்லாங்குழி ரோடுகளால் மழைக்காலத்தில் விபத்துக்கள் ஏராளம். ரோடு விரிவாக்கம் இல்லாதது, ரோட்டோரம் வாகன ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகளுக்கு எந்நாளும் நெருக்கடி தான்.பஸ் ஸ்டாண்ட் ‘புஸ்’இட வசதியில்லாததால் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைக்கும் திட்டம் ‘புஸ்’வாணமானது. ஏற்கனவே இருக்கும் பஸ் ஸ்டாண்டை 4 ஆண்டுகளாக ரூ.5 கோடியில் சீரமைக்கும் பணிதான் நடக்கிறது. புதிய கடைகள் கட்டி ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதேபோல் காந்தி மார்க்கெட்டை சீரமைக்கும் பணியும் மந்தமாக நடக்கிறது. அதனால் மேற்கு ரத வீதி, மேற்கு தாலுகா அலுவலகம் ரோட்டில் செல்ல முடியாத நிலை உள்ளது.மூழ்கிய படகு குழாம்கோடிக் கணக்கில் செலவு செய்து 12 இடங்களில் அமைத்த பொழுதுபோக்கு பூங்காக்கள் பராமரிப்பின்றி பாராமுகமாய் கிடக்கிறது. சுற்றுலாவை மேம்படுத்த மலையடிவார கோட்டைக் குளத்தில் படகு குழாம் அமைக்க போட்ட திட்டமும் அப்படியே மூழ்கி விட்டது. ரூ.3 கோடியில் சிலுவத்துார் ரோடு, கோபாலசமுத்திரம் கரை, நத்தம் ரோட்டில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு குளம், கழிவுநீர் சேகரிக்கத்தான் பயன்படுகிறது. ரூ.20 கோடியில் ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் அருகே கட்டப்பட்ட புதிய தடுப்பணை கேட்பாரின்றி புதர் மண்டி வீணாகிறது. இறுதி வரை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் திண்டுக்கல்லுக்கு இடமே இல்லை.இத்தனை ‘இல்லை’களையும் மீறி எப்படியோ கிடைத்தது ‘சிறந்த மாநகராட்சி’ விருதுதான். சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளுடன் ஒப்பிடுகையில் திண்டுக்கல்லில் கடந்த 7 ஆண்டுகளில் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை.

வெறும் ‘அந்தஸ்து’ வெற்றுப் பேப்பரில் இருந்தால் போதுமா… நடைமுறையில் வேண்டாமா… நகராட்சியைவிட்டு நகர்த்தி, வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல அதிகாரிகளோ, ஆள்பவர்களோ முயற்சிக்கவில்லை. இந்தாண்டாவது மாநகராட்சியாக மாற்ற முயற்சிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.