அதிமுகவில் சசிகலாவை இணைந்து இந்த தேர்தல் களத்தில் திமுகவை எதிர்கொள்வது தான் சிறப்பான வியூகமாக இருக்கும் என பாஜக இறங்கி வந்த நிலையில், அதிமுக பிடிகொடுக்காமல் இருந்து வருகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மேற்கு மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் மட்டுமே அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு டாப் கொடுத்தனர். காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் திமுக வேட்பாளர்களிடம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். அந்த தேர்தலில் தென்மாவட்டங்களில் டிடிவி தினகரன் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகள் பெற்றார். எனவே வரும் சட்டமன்ற தேர்தலின் போது இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்று பாஜக கருதுகிறது.
எனவே சசிகலாவை ஒதுக்கி வைத்தால், மறுபடியும் தினகரன் தனது கட்சி வேட்பாளரை சட்டமன்ற தேர்தலில் நிறுத்துவார். இதனால் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்குகள் சிதறும் என பாஜக கருதுகிறது. எனவேதான் சசிகலாவை மறுபடியும் அதிமுக இணைக்க பாஜக தரப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால் தங்கள் கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம் என அதிமுகவினர் கூறியதாக கூறப்படுகிறது.
ஆனாலும் தேர்தல் தொடர்பான வியூகங்களில் தங்களுக்கு சசிகலா, தினகரன் ஆதரவு தேவை என்று பாஜக கருதுகிறது. தென் மாவட்டங்களில் உள்ள சுமார் 70 முதல் 80 தொகுதிகளில் அமமுக கணிசமான வாக்குகளைப் பெறும் என பாஜக நம்புகிறது. இந்த வாக்கை தவற விடாமல் இருக்க தற்போது வேறு ஒரு முயற்சியை பாஜக இறங்கியுள்ளது. அதிமுகவில் சசிகலாவை இணைக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் தினகரனின் அமமுகவை இணைக்கலாம் என காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.