லண்டன்:பிரிட்டன் இளவரசர் ஹாரி, மீண்டும் அரசு குடும்பத்தில் இணைவதில்லை என முடிவு எடுத்ததை அடுத்து, ராணுவத்தில் அவருக்கு வழங்கப்பட்ட கவுரவ பட்டங்களை இழக்க உள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஹாரி, 2018ல், மெகன் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஓராண்டுக்கு முன், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி, சாதாரண பிரஜையாக வாழ விரும்புவதாக, ஹாரி – மெகன் தம்பதி அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அவர்கள், அமெரிக்காவில், சாதாரண மக்களில் ஒருவர்களாக வசித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு துவக்கத்தில், தன் பாட்டி, இரண்டாம் எலிசபெத் ராணியின் வற்புறுத்தலின்படி, அரச குடும்பத்தில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்வதாக, ஹாரி தெரிவித்திருந்தார்.
தற்போது தங்கள் முடிவில் மாற்றமில்லை என, ஹாரி தம்பதி உறுதியாக தெரிவித்து விட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது. அதனால், முன்னாள் ராணுவ வீரர் என்ற வகையில், ஹாரிக்கு வழங்கப்பட்ட ஏராளமான கவுரவ பட்டங்கள், காமன்வெல்த் விருதுகள், புரவலர் அந்தஸ்து ஆகியவற்றை, ராணியிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அதுபோல, இளவரசி என்ற முறையில், மெகன் பெற்ற கவுரவ பட்டங்கள் அனைத்தையும் திரும்பத் தர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement