சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
ஐபிஎல்-இல் வீரர்களை எடுக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் அதிக விலை கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தென்னாப்பிரிக்க வீரர் கிரிஸ் மோரிஸை எடுத்துள்ளது. அவரது ஏலத்தொகை இதுவரை ஐபிஎஸ் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரூ.16.25 கோடி.
இப்படி பலரும் போட்டி போட்டுக் கொண்டு முன்னணி வீரர்கள் ஏலம் எடுத்த நிலையில், சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. கடைசியாக மும்பை அணி அர்ஜூன் டெண்டுல்கரை அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
அர்ஜூன் டெண்டுல்கர் நீண்ட நாட்களுக்கு பிறகு சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் விளையாடினார். ஆனால் பெரிதாக அவர் சோபிக்கவில்லை. அதனால் அவரை மும்பை அணி ஏலத்தில் எடுக்காது என்று கூறப்பட்டது.
ஆனால் ரசிகர்கள் பலரும் மும்பை அணிக்காக அர்ஜூன் டெண்டுல்கரை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து அவர் அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கிளப் போட்டி ஒன்றில் அர்ஜூன் டெண்டுல்கர் 31 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். ஆனால், இதைத் தவிர சச்சினின் மகன் பெரிய சாதனைகள் எதையும் படைக்கவில்லை. குறிப்பிட்ட எந்தவொரு போட்டியிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை.
சச்சினின் மகனை விட நன்றாக விளையாடக் கூடிய நிறைய வீரர்கள் இருந்தாலும், சச்சினின் மகன் என்கிற ஒரே காரணத்திற்காக மட்டுமே இத்தனை லட்சங்களுக்கு ஏலம் எடுத்தது பலரையும் முணுமுணுக்க வைத்துள்ளது. உண்மையில் நன்றாக விளையாடக் கூடிய எத்தனையோ பேர் இருக்கும் போது, இன்னொருவரின் எதிர்காலத்தை இருட்டாக்கி சச்சினின் மகன் இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.