டெங்கு தடுப்புப் பணியாளர்களை வீட்டிற்குள் அனுமதிக்காவிட்டால் நடவடிக்கை: பொது சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் எச்சரிக்கை

‘‘டெங்கு தடுப்புப் பணியாளர்களை வீட்டிற்குள் அனுமதிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று பொதுசுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் எச்சரித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் 3 ஆண்டுகளிக்குப் பின் தற்போது டெங்கு மரணங்களும், பாதிப்பும் அதிகரித்துள்ளது. அதனால், டெங்கு தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மாநகராட்சி வார்டு பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகள் குறித்து பொது சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சில குடியிருப்புப் பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணியாளர்களை வீட்டிற்குள் அனுமதிக்க மறுப்பதாக அதிகாரிகள் கூறினர்.

அதற்கு அவர், டெங்கு தடுப்புப் பணியாளர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட வட்டார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும், சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்துமாறும், காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிந்து உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கூறினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) அர்ஜீன்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் குமரகுருபரன், மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் (பொ) இஸ்மாயில் பாத்திமா, பூச்சியியல் வல்லுநர் வரதராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.