‘டைம்ஸ்’ பத்திரிகையின் வளர்ந்து வரும் தலைவர்கள் பட்டியலில் 6 இந்தியர்கள்

நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து வெளிவரும் ‘டைம்’ பத்திரிகை, உலகளவில் உருவாகி வரும் 100 தலைவர்கள் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த தலைவர்கள் எதிர்காலத்தை வடிவமைப்பார்கள் என்பது ‘டைம்’ பத்திரிகையின் கணிப்பு ஆகும்.

நேற்று முன்தினம் வெளியாகியுள்ள இந்த 100 வருங்கால தலைவர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியினர் 5 பேர் இடம் பெற்றிருப்பது சிறப்பு.

அவர்கள் வருமாறு:-

* இங்கிலாந்து நாட்டின் நிதி மந்திரி ரிஷி சுனாக். 40 வயதே ஆன இவர் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார். இளம் மந்திரியாக இருந்து, நாட்டின் நிதி மந்திரியாக உயர்ந்துள்ளவர் இவர். இங்கிலாந்தின் நாட்டின் புகழ்பெற்ற அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்கிறார். இவர் இங்கிலாந்தின் வருங்கால பிரதமர் என்றும் சொல்கிறார்கள்.

* டுவிட்டர் நிறுவனத்தின் முன்னணி வக்கீல் விஜயா கடே (46). டுவிட்டரின் தலைசிறந்த நிர்வாகி என்ற பெயரை இந்தப் பெண் எடுத்திருக்கிறார்.

* அமெரிக்காவிலும், கனடாவிலும் இயங்கி வருகிற பலசரக்கு வினியோக நிறுவனமான இன்ஸ்டாகார்ட் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான அபூர்வா மேத்தா(34). கொரோனா காலத்தில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, பொதுமக்களிடம் இருந்து வந்து குவிந்த ஆர்டர்களுக்கு ஏற்ப பலசரக்கு பொருட்களை வினியோகிக்க நடவடிக்கை எடுத்தவர்.

* லாப நோக்கின்றி செயல்படும் கெட் அஸ் பிபிஇயின் செயல் இயக்குனர் ஷிகா குப்தா

* அமெரிக்காவில் செயல்படும் அப்சால்வ் நிறுனத்தின் நிறுவனர் ரோகன் பவுலுரி

இவர்களுடன் இந்தியாவில் இயங்கி வருகிற பீம் ஆர்மி என்று அழைக்கப்படுகிற பீம் படையின் தலைவரான சந்திரசேகர் ஆசாத்தும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்தியரான இவருக்கு வயது 34. தலித் இனத்தவருக்காக பீம் ஆர்மி பள்ளிகளை நடத்துகிறது.

“இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொருவரும் வரலாற்றை உருவாக்க தயாராக உள்ளனர். உண்மையை சொல்வதென்றால், ஏற்கனவே வரலாற்றை உருவாக்கியும் உள்ளனர்” என்று இந்த பட்டியலை உருவாக்கிய ‘டைம்’ பத்திரிகை ஆசிரியர் குழுவின் இயக்குனர் டான் மக்சாய் புகழாரம் சூட்டி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.