திண்டிவனம் பகுதியில் திருட்டு, வழிப்பறியால் அவதி..போலீசார் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அதிகளவு நடக்கும் பகுதியாக திண்டிவனம் மாறி வருகிறது. திண்டிவனம் உட்கோட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் திருட்டு மற்றும் வழிபறி சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளன.

கடந்த 8ம் தேதி நள்ளிரவு, திண்டிவனம்-மரக்காணம் ரோடு சந்திப்பில் உள்ள பெட்ரோல் பங்க்கில், எறையானூரை சேர்ந்த செந்தில்குமார், 38; நல்லாவூரை சேர்ந்த சுரேஷ், 29; ஆகியோர் பணியில் இருக்கும் போது, மூன்று பேர் கொண்ட முகமூடி கும்பல், இருவரையும் தாக்கி ரூ. 25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது.இந்த சூடு அடங்குவதற்குள், கடந்த 12ம் தேதி மரக்காணம் ரோட்டில் மன்னார்சாமி கோவில் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெரினா, 70; என்பவர் நடந்து சென்றபோது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர் , அவர் அணிந்து சென்ற நான்கரை சவரன் செயினை பறித்து சென்றனர்.அதே தினத்தில், ஒலக்கூர் அடுத்த ஓங்கூர் குளக்கரை தெருவை சேர்ந்த ஏழுமலை மனைவி குப்பம்மாள், 45; என்பவர், தொழுபேடு பகுதியில் இருந்து, ஓங்கூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்ற போது, அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் , குப்பம்மாள் கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர்.அதில் தங்க செயின் கீழே விழுந்ததால், அந்த ஆசாமிகள் தப்பி சென்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் தீவனுார் அருகேயுள்ள விழுக்கம் பள்ளத்தெருவை சேர்ந்த அஜித்பிரசாத் ஜெயின், 61; என்பவரின் வீட்டின் கதவை உடைத்து, ரூ. 70 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றனர். அன்றைய தினத்தில், அதே காலனி பகுதியில் வசிக்கும், பூங்காவனம் மனைவி தோகையம்மாள், 65; என்பவரின் வீட்டின், கதவை உடைத்து, மர்ம ஆசாமிகள் திருட முயற்சி செய்துள்ளனர். இது குறித்து ரோஷணை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதற்கிடையே கடந்த இருதினங்களுக்கு முன்பு ஒலக்கூர் அடுத்த கீழ்பாதி கிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி, 45; என்பவரின் வீட்டின் கதவை உடைத்து, ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள ஒரு சவரன் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர்.இந்த சம்பவங்களில், பெட்ரோல் பங்க் அருகே நடந்த கொள்ளை வழக்கில் மட்டும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மீதம் உள்ள சம்பவங்களில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருவது தெரிகிறது.கிராமங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்தும், தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்தும் திருட்டு, வழிபறி சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இதனால் பொது மக்கள் தனியாக நடந்து செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.எனவே குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், போலீசாரின் ரோந்துப் பணியை அதிகப்படுத்தி, திருட்டு, வழிபறி சம்பவங்களை தடுத்து பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.பைக் திருட்டு அதிகரிப்பு:திண்டிவனம் நகரப்பகுதிக்கு தினந்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து சொந்த வேலை காரணமாக ஏராளமானோர் வருகின்றனர்.

இவர்கள் நேரு வீதி, மேம்பாலத்தின் கீழ் தங்களது பைக்குகளை நிறுத்தி விட்டு செல்கின்றனர். பணியை முடித்து விட்டு வந்து பார்க்கும் போது, பைக்குகள் திருடுபோன கண்டு அதிர்ச்சியடைக்கின்றனர். பைக்குகளை மர்ம ஆசாமிகள் திருடிச்செல்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. நகரப்பகுதியில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில், 10க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடுபோனதாக பொது மக்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.