பக்கத்து நாடுகளுக்கு சென்றுவர டாக்டர்கள், நர்சுகளுக்கு சிறப்பு விசா – பிரதமர் மோடி யோசனை

புதுடெல்லி:

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை இந்தியா வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

இந்த தருணத்தில் டெல்லியில நேற்று ‘கொரோனா மேலாண்மை: அனுபவம், நல்ல நடைமுறைகள், முன்னோக்கி செல்லும் வழி’ என்ற தலைப்பில் ஒரு மாநாடு நடைபெற்றது.

இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், மாலத்தீவு, மொரீசியஸ், செசல்ஸ் ஆகிய அண்டை நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

21-ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக அமைய வேண்டுமானால், தெற்காசியா மற்றும் இந்திய பெருங்கடல் தீவு நாடுகளின் அதிக ஒருங்கிணைப்பு இல்லாமல் அவ்வாறு இருக்க முடியாது. கொரோனா பெருந்தொற்றின்போது காட்டப்படுகிற பிராந்திய ஒற்றுமை உணர்வு, அத்தகைய ஒற்றுமை உணர்வு சாத்தியம் என்று நிரூபித்து காட்டி உள்ளது.

எங்களது வெளிப்படையான மனப்பான்மை மற்றும் உறுதியினால் நாங்கள் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் உலகளவில் மிகக்குறைந்த இறப்பு வீதத்தை அடைந்துள்ளோம். இன்றைக்கு நமது பிராந்தியம் மற்றும் உலக நாடுகள், விரைவாக தடுப்பூசியை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. இதிலும் நாம் கொரோனா தொற்று வேகமாக பரவியபோது காட்டிய அதே ஒத்துழைப்பை பராமரிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், பிராந்திய நாடுகள் கொரோனா அச்சுறுத்தலை அங்கீகரித்து, அதை எதிர்த்து போராடுவதற்கு முதன்முதலாக ஒன்றுபட்டன. மேலும் பல பிராந்தியங்களும், குழுக்களும் எங்களது ஆரம்ப உதாரணத்தை பின்பற்றின.

கொரோனா தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு, உடனடி செலவுகளை சமாளிப்பதற்கு நாங்கள் கொரோனா அவசர கால சிறப்பு நிதியை உருவாக்கினோம்.

எங்கள் வளங்கள், மருந்துகள், பி.பி.இ. என்னும் சுயபாதுகாப்பு கருவிகள், பரிசோதனை கருவிகள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டோம். எல்லாவற்றுக்கும் மேலாக மிகுந்த மதிப்புக்குரிய அறிவை, நமது சுகாதார பணியாளர்களின் கூட்டு பயிற்சி மூலம் பகிர்ந்து கொண்டோம்.

தொற்றுநோய் தீவிர பாதிப்பில் இருந்து சுகாதாரத்தில் நமது ஒத்துழைப்பு ஏற்கனவே எவ்வளவோ சாதித்துள்ளது. இதில் நமது லட்சியத்தை மேலும் உயர்த்த முடியுமா என்று பார்க்க வேண்டும்.

இந்த பிராந்தியத்தின் டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் சிறப்பு விசா வழங்க முடியுமா என பார்க்க வேண்டும். அப்படி செய்கிறபோது, அவசர காலத்தில் அவர்களை அழைக்கிற நாடுகளுக்கு விரைவாக பயணம் செய்ய முடியும்.

மருத்துவ நெருக்கடிகளின்போது ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு பிராந்திய விமான ஆம்புலன்ஸ் ஒப்பந்தம் ஏற்படுத்த முடியுமா? கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் செயல்திறன் பற்றிய தரவுகளை ஒன்றிணைக்கவும், தொகுக்கவும், ஆய்வு செய்வதற்கும் ஒரு பிராந்திய தளத்தை உருவாக்க முடியுமா? இத்தகைய ஒத்துழைப்பு, மற்ற பகுதிகளிலும் நம்மிடையே பிராந்திய ஒத்துழைப்புக்கான பாதையாக மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.