பயங்கரவாத தாக்குதல்: ஆபத்து சூழலில் வசிக்கும் 30 லட்சம் குழந்தைகள்

நியூயார்க்,
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக போராளி குழுக்கள் ஆயுதங்களை கொண்டு உள்ளூர் மக்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனால், கிராமங்களில் வசிக்கும் சமூக மக்கள் அனைவரும் பாதுகாப்புக்காக வேறு இடங்களுக்கு தப்பியோடி நெருக்கடியான இடங்களில் வசித்து வருகின்றனர்.  சிலர், நீர், உணவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளற்ற பகுதிகளில் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

போராளிகளிடம் சிக்கும் மக்கள் கொல்லப்படும் சூழல் உள்ளது.  முழு குடும்பத்தினரையும் போராளி குழுக்கள் கொல்வதுடன், பள்ளி கூடங்கள், மருத்துவமனைகளையும் அழித்து விடுகின்றனர்.  கிராமங்களை தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர்.
இதுபற்றி யுனிசெப் அமைப்பு வெளியிட்டு உள்ள புதிய அறிக்கை ஒன்றில், கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் நிலவரப்படி, காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் 50 லட்சம் பேர் உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்து உள்ளனர்.
இவற்றில் வடக்கு மற்றும் தெற்கு கிவு பகுதி, இதுரி மற்றும் தங்கனியிகா ஆகிய 4 கிழக்கு மாகாணங்கள் அதிகம் பாதிப்படைந்து உள்ளன.  அவர்களில் 30 லட்சம் பேர் குழந்தைகள் ஆவர்.  அவர்களில் 5 லட்சம் குழந்தைகள் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர் என தெரிவித்து உள்ளது.
நில விவகாரங்கள், ஆயுதங்கள் கிடைப்பது மற்றும் பலவீன அரசாங்கம் ஆகியவை வன்முறைக்கான காரணங்களாக அறியப்படுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.