சென்னை, பிப். 19–
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மன வேதனையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மின்கம்பத்தில் ஏறிய இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்தார் போலீஸார் சமாதானம் செய்து அவரைக் கீழே இறக்கினர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள மின்கம்பத்தில் இளைஞர் ஒருவர் திடீரென ஏறினார். அதைப் பார்த்த அங்கிருந்த பயணிகள் அவரை கீழே இறங்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அவர் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டிக் கீழே இறங்க மறுத்தார். மேலிருந்து குதித்து உயிரைவிடப் போவதாக மிரட்டினார்.
இதையடுத்து பொதுமக்கள் கோயம்பேடு பேருந்து நிறுத்த போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மின்கம்பத்தில் ஏறிய இளைஞருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்தார். இதையடுத்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்த கோயம்பேடு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் ராட்சத கிரேன் தொட்டி மூலமாக மின்கம்பத்தில் இருந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சமாதானமான அவர் கீழே இறங்கச் சம்மதித்தார். இதையடுத்து கிரேன் மூலம் அவரை மீட்டனர். மதுபோதையில் இருந்த அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ஆபிரஹாம் (43), ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவரது மனைவி சில நாட்களுக்கு முன் இறந்துபோனதால் அந்த துக்கத்தில் இருந்தவர் மது அருந்திய நிலையில் மன வேதனையில் விளக்குக் கம்பம் மீதேறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மரணம் அடைந்தவரை நினைத்துக் கலங்குவதை விடுத்து உன் பிள்ளைகளை நல்லபடியாக வாழவைப்பதே மனைவியின் மரணத்திற்குச் செய்யும் ஈடான காரியமாக இருக்கும். உன் மனைவியும் அதைத்தான் விரும்புவார் எனக்கூறி புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர்.