மோடி 25ல் வருகை; கோவையில் தீவிர பாதுகாப்பு

கோவை : பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வரும், 25ம் தேதி கோவையில் பா.ஜ., பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.இதையடுத்து, கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநகர போலீஸ் சார்பில், ஆட்டோ டிரைவர்கள், பிரிண்டிங் பிரஸ், திருமண மண்டபங்கள், தனியார் லாட்ஜ் நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

கோவை மாநகர சட்டம், ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் கூறியதாவது: லாட்ஜ்களில் தங்கும் அனைவரிடமும் ஆதார் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டை கட்டாயம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்குவோரின் தகவல்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு தர உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்த தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்களில், கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்சேபத்துக்குரிய, சர்ச்சைக்குரிய, மதரீதியான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள், நோட்டீஸ்களை அச்சிடக்கூடாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘கொடிசியா’ வளாகம் முழுவதும், ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு நேர ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.