அதிமுக ஆட்சியில் ரவுடியிசம் அதிகரித்துவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவின் ரவுடியிசத்தை ஒடுக்குவதே முதல் பணி என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. உங்கள் தொகுதியில் உங்கள் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், இறுதிக்கட்ட சமயத்தில் மக்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரையில் நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மு.க ஸ்டாலின், இன்று கோயம்புத்தூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்கநல்லூரில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
இதன்போது பேசுகையில், ” தேர்தல் வரும் வேளைகளில் மக்களை சந்திக்கும் பழக்கம் என்னிடம் இல்லை. எந்த விதமான சூழ்நிலையிலும் உங்களோடு உங்களாக இருப்பவன் இந்த மு.க ஸ்டாலின். பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் ரூ.100-ஐ தொடும்.
மத்தியில் நடைபெறும் பாஜக ஆட்சி மற்றும் மாநிலத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியால் மக்கள் வதைக்கப்படுகின்றனர். அதிமுக ஆட்சியில் ரவுடியிசம் அதிகரித்துவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவின் ரவுடியிசத்தை ஒடுக்குவதே முதல் பணி ” என்று தெரிவித்தார்.