� பாங்காங் சோ ஏரி பகுதியில் இந்திய – சீன படைகள்..வாபஸ் இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் இன்று பேச்சு

லடாக், -கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலிருந்து ராணுவத்தை, இந்தியாவும், சீனாவும் முழுமையாக திரும்ப பெற்றுவிட்டன. இதையடுத்து, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் அளவில் இன்று பேச்சு நடக்கிறது. இதில், லடாக்கின் மற்ற பகுதிகளில் இருந்து, ராணுவத்தை வாபஸ் பெறுவது பற்றி பேசப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு லடாக் பகுதியில், கடந்தாண்டு ஜூனில், நம் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனால், எல்லையில் கடும் பதற்றம் நிலவியது. இரு நாடுகளும், லடாக் எல்லையில் படைகளை குவித்தன.பதற்றத்தை குறைக்க, இந்தியா – சீனா இடையே, ராணுவ கமாண்டர்கள் அளவில், ஒன்பது சுற்று பேச்சு நடத்தப்பட்டது. இதன் விளைவாக, எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெற, இரு நாடுகளும் சம்மதித்தன. பாங்காங் சோ ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு கரையில் இருந்து, படைகளை திரும்பப் பெற, ஒப்பந்தம் செய்யப்பட்டதுபடைகளை முழுமையாக வாபஸ் பெற்ற பின், இரு நாட்டின் ராணுவ கமாண்டர்கள் அளவில், 10ம் கட்ட பேச்சு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. எதிர்பார்ப்புஇதையடுத்து, பாங்காங் சோ ஏரி தெற்கு மற்றும் வடக்கு கரையில் இருந்து, இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறும் பணி, சமீபத்தில் துவங்கியது. எதிர்பார்த்ததை விட வேகமாக, படைகளை சீனா வாபஸ் பெற்றது. ஏரி கரையில் நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் அனைத்தையும், சீனா வாபஸ் பெற்றது. பதுங்கு குழிகள் இடிக்கப்பட்டுவிட்டன. தற்காலிக கூடாரங்களையும், சீனா அகற்றிவிட்டது. இதேபோல், நம் ராணுவமும் முழுமையாக வாபஸ் பெறப்பட்டு விட்டது. இந்நிலையில், இந்திய – சீன ராணுவ கமாண்டர்கள் பங்கேற்கும், 10ம் கட்ட பேச்சு இன்று நடக்கிறது. எல்லைக் கட்டுப்பாடு கோட்டில், சீன பகுதியில் அமைந்துள்ள மோல்டோ என்ற இடத்தில், இந்த பேச்சு, காலை, 10.00 மணிக்கு துவங்குகிறது.இதில், கிழக்கு லடாக்கின் மற்ற பகுதிகளான, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தீப்சாங் ஆகிய பகுதியில் இருந்து, படைகளை விரைவாக வெளியேற்றுவது குறித்து பேசப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.முடிவுஇந்தப் பேச்சில், இந்திய தரப்புக்கு, ராணுவ அதிகாரி, பி.ஜி.கே.மேனனும், சீன தரப்புக்கு, மேஜர் ஜெனரல் லியு லின்னும் தலைமை வகிக்கின்றனர். பாங்காங் சோ ஏரி பகுதியில், பல்வேறு மலைமுகடுகள் உள்ளன. இதில், மூன்றாம் எண் முகடில் இந்திய ராணுவமும், எட்டாம் எண் முகடில், சீன ராணுவமும் முகாம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ‘மூன்று – எட்டாம் எண் முகடுகளுக்கு இடையே உள்ள பகுதியில், இரு நாட்டு ராணுவமும், எந்த ரோந்து பணியும் மேற்கொள்ளக் கூடாது’ என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. சீனா ஒப்புதல்! இந்தியா — சீனா இடையே, கடந்த மே மாதம் முதல், எல்லை பகுதியில், மோதல் நிலவி வருகிறது. ஜூன் 15ம் தேதி இரவில், லடாக் அருகே, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். நம் ராணுவத்தின் பதிலடியில், சீன வீரர்கள், 43 பேர் இறந்தனர்; இதை, அமெரிக்கா உட்பட பல நாடுகளும் உறுதி செய்தன. ஆனால், தங்கள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி, சீன எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்தது. இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களின் பதில் தாக்குதலில், நான்கு வீரர்கள் உயிரிழந்ததாக சீனா அதிகாரப்பூர்வமாக தற்போது தெரிவித்துஉள்ளது. சென் ஹாங்ஜுன், சென் சியாங்ராங், சியாவோ சியுவான், வாங் ஜுயோரன் ஆகிய நான்கு சீன வீரர்கள், இந்திய ராணுவத்தினருடனான மோதலில் உயிரிழந்துள்ளதாக, சீன ஊடக அறிக்கைகளை மேற்கோளிட்டு, ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.