லாஸ் ஏஞ்சல்ஸ்,
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சான் பெட்ரோ என்ற பகுதியில் ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய விமானம் ஒன்று பறந்து சென்றது. அந்த விமானத்தில் விமானி ஒருவர் மட்டுமே பயணம் செய்துள்ளார்.
அந்த விமானம் திடீரென டிராக்டர் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் சிக்கி படுகாயங்களுடன் கிடந்த விமானியை அருகே இருந்தவர்கள் மீட்டனர். எனினும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க இயலாத அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. இதில், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
டிராக்டரில் பயணித்த 30 வயதுடைய நபர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளார். துறைமுகம் அருகே இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. எனினும் துறைமுக நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என லாஸ் ஏஞ்சல்ஸ் நகர தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது. இந்த விபத்து பற்றி தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.