குறைப்பு! 1ல் இருந்து 5ம் வகுப்பு வரை பாடத் திட்டம்…பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை

புதுச்சேரி : -ஒன்றாம் வகுப்பில் இருந்து 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத் திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக, கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டன.

தொற்று ஒரளவுக்கு கட்டுக்குள் வந்ததால், அக்டோபர் மாதத்தில் இருந்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டன.கடந்த மாதம் 18ம் தேதி பள்ளிகள் முழுமையாக திறந்து, வகுப்புகள் நடக்கின்றன. இருப்பினும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடக்கின்றன. நடப்பு கல்வி ஆண்டில் பல நாட்கள் பள்ளிகள் நடக்காததால், 1ம் வகுப்பில் இருந்து 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத் திட்டத்தை குறைத்து, புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, தமிழ், ஆங்கிலம், கணக்கு, சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. பாடங்களில் எந்த யூனிட் நடத்த வேண்டும், பக்கம் எண் போன்ற விபரங்கள் சீனியர் ஆசிரியர்கள் மூலமாக தொகுக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனர் ருத்ர கவுடு பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:கொரோனா தொற்று காரணமாக, நடப்பு கல்வி ஆண்டு பெரிதும் பாதித்துள்ளது. தொடக்கப் பள்ளிகள் கடந்த ஜனவரி மாதத்தில் தான் திறக்கப் பட்டன. வழக்கத்தைவிட குறைவான வேலை நாட்களே உள்ளதால், 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடத் திட்டங்களை குறைக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களை நடத்துமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும், 6ம் வகுப்பில் இருந்து 9ம் வகுப்பு வரையில் பாடத் திட்டங்களை தமிழக அரசு குறைத்துள்ளது. அதை, புதுச்சேரியிலும் பின்பற்றலாம்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.சுற்றறிக்கையுடன், 1ல் இருந்து ஆரம்பித்து, 5 வரை வகுப்புவாரியாகவும், பாடங்கள் வாரியாகவும் குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் 80 ஆயிரம் மாணவ மாணவிகள் பயனடைவர்.

அனைத்து பள்ளிகளுக்கும்பொருந்தும்!நடப்பு 2020-21ம் கல்வியாண்டில் வேலை நாட்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளது. இதனால், மாணவர்கள் நலன் கருதி பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இது, அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல், தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தை ஆசிரியர்கள் பின்பற்றலாம். ருத்ர கவுடு, இயக்குனர், பள்ளிக் கல்வித்துறை.மே மாதம் வரை பள்ளிகள் திறப்புஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் துவங்குவது வழக்கம். அடுத்த ஏப்ரல் மாதத்தில் கல்வியாண்டு முடிவுக்கு வரும். கொரோனா பாதிப்பு எதிரொலியாக, நடப்பு கல்வியாண்டில் மே மாதம் வரை பள்ளிகள் திறந்து வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.