
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சியினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். கிட்டதட்ட பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை இறுதி செய்துவிட்டன.
ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை தனது நிலைப்பாட்டை உறுதியாக அறிவிக்கவில்லை. தனித்து போட்டியா அல்லது கூட்டணியா என உறுதியான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதாக தகவல் வெளியானலும் அதற்கு இரு தரப்பும் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி பெரிய அளவில் மாநாடு நடத்த திட்டமிட்டனர். ஆனால் மாநாட்டுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இதனால், அடுத்த மாதம் 7ஆம் தேதி மாநாடு நடத்த முடிவு செய்துள்ளனர். எனினும் கட்சியின் தொடக்க விழாவை தனியார் அரங்கத்தில் நடத்துகின்றனர். அதன்படி நாளை காலை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள உள் அரங்கத்தில் கமல்ஹாசன் தலைமையில் விழா நடைபெறுகிறது.
சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் பற்றி நாளைய கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் ஆம் ஆத்மி மற்றும் சில அமைப்புகளுடன் கமல்ஹாசன் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
newstm.in