புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் அரசில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர்.
புதுவை சட்டசபையில் ஆளும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணிக்கு, சுயேச்சை எம்.எல்.ஏ.வையும் சேர்த்து 14 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. எதிர்கட்சிகளான என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.வுக்கு 3 நியமன பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களோடு 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இதனால் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் புதுவை சட்டசபையில் ஒரே எண்ணிக்கையிலான சமபலம் உருவாகியுள்ளது.
இதனையடுத்து 14 எதிர்க்கட்சிகள் எம்.எல். ஏ.க்களும் ஒருங்கிணைந்து கையெழுத்திட்டு சட்டப்பேரவையை கூட்டி காங்கிரஸ் அரசு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் தமிழிசையிடம் மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் புதுவை சட்டப்பேரவை செயலர் முனுசாமி புதுவை சட்டமன்றம் கூடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது அறிவிப்பில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு 14-வது சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே புதுவை சட்டசபையில் இடம் பெற்றுள்ள 3 பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை கிடையாது என ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை அளித்துள்ளதை எதிர்க்கட்சிகள் சுட்டிகாட்டி வருகின்றனர்.
நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக பல தீர்ப்புகள் வந்துள்ளது என்றும் இது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும் முதல்-அமைச்சர் நாரா யணசாமி கூறியுள்ளார்.
அதோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் தங்களுக்கு மெஜாரிட்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஆளும் காங்கிரசுக்கு 10, தி.மு.க. 3, சுயேச்சை 1 என காங்கிரஸ் கூட்டணிக்கு 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எதிரணியில் 3 பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களை தவிர்த்து என்.ஆர். காங்கிரசுக்கு 7, அ.தி.மு.க. 4 என மக்களால் தேர்வு செய்யப்பட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் பலமே உள்ளது.
இருப்பினும், சட்ட சபையை பொறுத்த வரையில் சபாநாயகரின் முடிவே இறுதியானது என்பதால் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபித்து தப்புமா? என்பது நாளை மறுநாளே தெரியவரும்.
இதனிடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை புதுவை காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் சட்டமன்றத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.