பெர்சவரன்ஸ் ரோவரில் இருந்து தகவல் எவ்வாறு பெறப்படும்: ஸ்வாதி மோகன் விளக்கம்

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்‘ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
இதற்கிடையே, செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது என நாசா தெரிவித்துள்ளது. அது இரண்டு ஆண்டுகள் அங்கு சுற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில் இந்தியாவில் பிறந்த நாசா விஞ்ஞானி டாக்டர் ஸ்வாதி மோகனுக்கு மிகப்பெரிய பங்கிருப்பது தெரிய வந்துள்ளது.
2013ல் தொடங்கிய இந்த திட்டத்தில் முதலில் இருந்தே ஈடுபட்டு வந்தார் ஸ்வாதி. மார்ஸ் 2020 திட்டத்தில் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தின் தலைவர் இவர்தான். ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை இவர் உருவாக்கியுள்ளார்.
பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய முதல் தகவலை உலகிற்கு கூறியது ஸ்வாதிதான். மேலும், பெர்சவரன்ஸ் வேலை என்ன? அது நாசா விஞ்ஞானிகளுக்கு எவ்வாறு தகவல் அனுப்பும் என்பது குறித்து ஸ்வாதி மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘செவ்வாய் கிரகத்தில் கால்பதித்துள்ள பெர்சவரன்ஸ் ரோவர் அங்கிருந்து பூமியில் செயல்படும் நாசா ஆய்வு குழு மற்றும் செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் இருக்கும் Mars Reconnaissance, MAVEN ஆகிய இரண்டு விண்கலங்களை தொடர்பு கொள்ளும்.
இரண்டு விண்கலத்திற்கும் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது உறுதி செய்யும் வகையில் சமிக்ஞை கொடுத்துள்ளது’’ என்றார்.
செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.