3 வயதில் 196 நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக சொல்லி அசத்தும் தமிழ் சிறுமி!

சார்ஜாவில் வசித்து வரும் 3 வயது தமிழக சிறுமி காதம்பரி 196 நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக சொல்லி அசத்தி வருகிறார்.

சார்ஜாவின் அல் நாதா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கே.பி.என். மகேஷ் கிருஷ்ணன் என்பவர் மனைவி திவ்யா சொர்ணம் மற்றும் மகள் காதம்பரியுடன் வசித்து வருகிறார்.

மகேஷ் கிருஷ்ணன் துபாயில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி இல்லத்தரசியாக உள்ளார். இவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்.

இந்தநிலையில், 3 வயதே ஆன சுட்டிக்குழந்தை காதம்பரி 196 நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக ‘கடகடவென’ கூறி அசத்தி வருகிறார்.

மகளின் அறிவாற்றலை கண்டு வியப்படைந்துபோன மகேஷ் கிருஷ்ணன் காதம்பரி குறித்து கூறியதாவது:-

தனது மகளை நர்சரி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்றால் கொரோனா காரணமாக அதற்கான வாய்ப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டது. இதனால் வீட்டிலேயே தனது மகளுக்கு ஏதாவது சொல்லிக் கொடுக்க வேண்டும் என திட்டமிட்டேன்.

மேலும் டி.வி.யாக இருந்தாலும், கம்ப்யூட்டர் ஆக இருந்தாலும் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கு மிகாமல் பார்க்க அனுமதிப்பதில்லை. ஏதாவது உடற்பயிற்சி, வெளியில் விளையாடுவது உள்ளிட்டவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்தினேன்.

குறிப்பாக என் மகளுக்கு நாடுகளின் தலைநகர் தொடர்பாக ஆரம்பத்தில் 10 முதல் 20 வரை சொல்லிக் கொடுத்தேன். பின்னர் இந்த தலைநகரங்களை சொல்வதில் காதம்பரி அதிக ஆர்வம் காட்டினாள். இதனால் படிப்படியாக 196 நாடுகளின் தலைநகர்களை சொல்லக்கூடிய திறமையை பெற்றாள்.

எந்த ஒரு நாட்டின் தலைநகரத்தை கேட்டாலும் சட்டென பதில் சொல்லக்கூடிய அளவுக்கு திறமையை பெற்றுள்ளாள். இது குறித்து தனது நண்பர்கள் உள்ளிட்ட பலரும் அவரிடம் கேள்விகள் கேட்டு சோதனை செய்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் இறைவனது திருநாமங்களை சொல்லும் சுலோகங்கள், திருக்குறள் உள்ளிட்ட பலவற்றையும் கூறி வருகிறார். படம் வரைதல், நீச்சல், இசைப்பயிற்சி ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டுள்ளார்.

மேலும் அவருக்கு தமிழ் மொழியில் அதிக ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் நீதிகதைகளை எனது மனைவி சொல்லிக் கொடுத்து வருகிறார்.

அவரது இந்த சாதனையானது உலக அளவில் தெரிய வேண்டும். இதற்காக கின்னஸ் சாதனை உள்ளிட்ட சர்வதேச அளவிலான சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும் என்பதே தங்களது விருப்பம்.

இந்த திறமைகள் அனைத்தையும் பெறுவதற்கு தனது மனைவி திவ்யா சொர்ணம் அதிக நேரம் செலவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.