இந்தியா முழுவதும் மாநிலங்களில் உள்ள வேறுபட்ட 38 அணிகள் கலந்து கொள்ளும் விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி 6 நகரங்களில் இன்று தொடங்குகிறது
19வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிப்ரவரி 20ம் தேதி தொடங்கி மார்ச் 14-ம் தேதி வரை நடக்கிறது. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் சூரத், இந்தூர், பெங்களூரு, ஜெய்ப்பூர், கொல்கத்தா, சென்னை ஆகிய 6 நகரங்களில் நடக்கிறது.
‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்கள் மார்ச் 7ம் தேதி தொடங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு ‘எலைட் ஏ’ முதல் ‘இ’ வரையிலான பிரிவில் தலா 6 அணிகளும், ‘பிளேட்’ பிரிவில் 8 அணிகளும் பங்கு பெற்றுள்ளன.
நடப்பு சாம்பியனான கர்நாடக அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவினருக்கான ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. 5 முறை சாம்பியனும், சென்ற முறையில் 2வது இடத்தை பெற்ற தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. பஞ்சாப், மத்தியபிரதேசம், ஜார்கண்ட், விதர்பா, ஆந்திரா ஆகியவை அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும். இந்த பிரிவினருக்கான ஆட்டம் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் நடைபெறும் .
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ‘எலைட்’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். அத்துடன் அந்த பிரிவில் 2வது இடத்தை பிடிக்கும் இரண்டு சிறந்த அணிகளும் கால்இறுதிக்குள் நுழையும். மேலும் 2வது இடத்தை பிடிக்கும் 3வது சிறந்த அணி, ‘பிளேட்’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் மோதும். இதில் வெற்றி பெறும் அணி கடைசி அணியாக கால்இறுதிக்கு முன்னேறும்.