38 அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் – இன்று தொடங்குகிறது

இந்தூர், 
19-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை) முதல் மார்ச் 14-ந் தேதி வரை நடக்கிறது. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் சூரத், இந்தூர், பெங்களூரு, ஜெய்ப்பூர், கொல்கத்தா, சென்னை ஆகிய 6 நகரங்களில் நடக்கிறது.

‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்கள் மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது. ‘நாக்-அவுட்’ சுற்று போட்டிக்கான இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி தொடர் அரங்கேறுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘எலைட் ஏ’ முதல் ‘இ’ வரையிலான பிரிவில் தலா 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பிளேட்’ பிரிவில் 8 அணிகள் அங்கம் வகிக்கின்றன.
நடப்பு சாம்பியனான கர்நாடக அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவினருக்கான ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. 5 முறை சாம்பியனும், கடந்த முறை 2-வது இடத்தை பெற்ற தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. பஞ்சாப், மத்தியபிரதேசம், ஜார்கண்ட், விதர்பா, ஆந்திரா ஆகியவை அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும். இந்த பிரிவினருக்கான ஆட்டம் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் நடக்கிறது.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ‘எலைட்’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். அத்துடன் அந்த பிரிவில் 2-வது இடத்தை பிடிக்கும் இரண்டு சிறந்த அணிகளும் கால்இறுதிக்குள் நுழையும். மேலும் 2-வது இடத்தை பிடிக்கும் 3-வது சிறந்த அணி, ‘பிளேட்’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் மோதும். இதில் வெற்றி பெறும் அணி கடைசி அணியாக கால்இறுதிக்கு முன்னேறும்.
ஷிகர் தவான், புவனேஷ்வர்குமார், குருணல் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, சுரேஷ் ரெய்னா, பிரித்வி ஷா, கருண் நாயர், சூர்யகுமார் யாதவ், கிருஷ்ணப்பா கவுதம், ஸ்ரீசாந்த், ராபின் உத்தப்பா, ஷிவம் துபே, பியுஷ் சாவ்லா உள்பட பல்வேறு நட்சத்திர வீரர்கள் இந்த போட்டியில் களம் காணுகிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்த போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
தினசரி ஆட்டங்கள் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் குஜராத்-சத்தீஷ்கார், ரெயில்வே-பீகார், கேரளா-ஒடிசா, கர்நாடகா-உத்தரபிரதேசம், விதர்பா-ஆந்திரா, ஜார்கண்ட்-மத்தியபிரதேசம், தமிழ்நாடு-பஞ்சாப், பரோடா-கோவா, ஐதராபாத்-திரிபுரா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு செய்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.