அனுமன் கோயிலுக்கு சட்ட அங்கீகாரம் அனைத்துக்கட்சிகளுடன் மேயர் தீவிர ஆலோசனை

புதுடெல்லி: சாந்தினி சவுக் பகுதியில் இடிக்கப்பட்ட அனுமன் கோயில் இருந்த அதே இடத்தில் தற்காலிகமாக பக்தர்களால்  அமைக்கப்பட்டுள்ள சிறிய கோயிலுக்கு சட்டரீதியான அங்கீகாரம் அளிப்பது குறித்து அனைத்துக்கட்சி ஆலோசனைகூட்டம் நடந்தது. டெல்லி சாந்தினி சவுக் பகுதியை சீரமைத்து அழகுப்படுத்தும் பணியை டெல்லி அரசின் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக, அங்கிருந்த நூற்றாண்டு பழைமை வாய்ந்த அனுமன் கோயில்  உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ஜனவரியில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பாஜ மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் திடீரென இரும்பு கம்பிகளை கொண்டு தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய கோயிலுக்கு தினசரி பலரும் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். இதில், ஆம் ஆத்மி, பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர். தற்காலிக கூடாரம் அமைத்து அனுமன் சிலையை வைத்து வழிபடுவதை வடக்கு மாநகராட்சி மேயர் ஜெய் பிரகாஷ் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின் பேசிய மேயர், இந்த தற்காலிக கோயிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் என தெரிவித்து இருந்தார். அதன்படி, நேற்றுமுன்தினம் மேயர் ஜெய் பிரகாஷ் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், தற்காலிகமாக பக்தர்கள் அமைத்துள்ள அனுமன் கோயில் கூடாரத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது என்றும், இதற்கான முன்மொழிவை வரும் மாநகராட்சி மாமன் கூட்டத்தில் கூட்டத்தில் தாக்கல் செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது. அதோடு, இதற்கான சட்ட முன்வடிவு தயார் செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இதுபற்றி ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய மேயர் ஜெய் பிரகாஷ், ”அடுத்து வரவுள்ள மாமன்ற கூட்டத்தின் போது, முன்மொழிவு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான சட்ட வரைவு அறிக்கை தயார் செய்யும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த மாமன்ற கூட்டத்தில் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பாக, இதுபற்றி என்டிஎம்சியில் இடம் பெற்றுள்ள பிற கட்சிகளான ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகியவற்றோடும் விவாதிக்கப்பட்டு ஒருமித்த கருத்து உருவாக்கப்படும்” எனறார். அதன்படி அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் மேயர், துணை மேயர், நிலைக்குழு தலைவர், மாநகராட்சி சபை தலைவர் யோகேஷ்வர்மா, எதிர்கட்சி தலைவரும் ஆம்ஆத்மி உறுப்பினருமான விகாஸ் கோயல், காங்கிரஸ் தலைவர் முகேஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதன்அடிப்படையில் இந்தவார இறுதியில் மாநகராட்சி கூட்டத்தில் அனுமன் கோயிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே அனுமன் கோயில் வளாகத்தில் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருப்பது குறித்து டெல்லி ேபாலீசில் பொதுப்பணித்துறை புகார் அளித்துள்ளது.ஆம்ஆத்மி, பா.ஜ மோதல்சாந்தினி சவுக்கில் அமைக்கப்பட்ட தற்காலிக அனுமன் கோயில் தொடர்பாக பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையிலான மோதல் வலுத்துள்ளது. பொதுப்பணித்துறை இதுகுறித்து போலீசில் அளித்த புகார் தொடர்பாக இந்த மோதல் வெடித்துள்ளது. பொதுப்பணித்துறை போலீசில் புகார் கொடுக்க கவர்னர் அலுவலகம் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் துர்கேஷ் பதக் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டு பெரும்நகைப்புக்கு உரியது என்று பா.ஜ பதிலடி கொடுத்துள்ளது. டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் கூறுகையில்,’ துர்கேஷ்பதக் குற்றச்சாட்டு பெரும் நகைப்புக்கு உரியது மட்டுமல்லாமல் அவரது விரக்தியை காட்டுகிறது. ஆம்ஆத்மி அரசின் பொதுப்பணித்துறை போலீசுக்கு எழுதிய கடிதம் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. அனுமன் கோயில் மீண்டு வருவதை ஆம்ஆத்மி விரும்பவில்லை என்பதேயே இதுகாட்டுகிறது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.